நெல்லையில் குறிப்பிட்ட பகுதியில் ஏராளமான திருநங்கைகள் வசித்து வருகிறார்கள். அவர்கள் நெல்லை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள கடைகளில் பல நேரங்களில் பணம் வசூல் செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அவர்களில் சிலர் கோயில் விழாக்களுக்கு கரகாட்டம் உள்ளிட்ட கிராமியக் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செல்வது வழக்கம். ஒரு சில திருநங்கைகள் மட்டும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.
அந்தப் பகுதியில் குடியிருந்து வரும் 35 வயதான திருநங்கை ஒருவர் பிழைப்புக்காக நாங்குநேரி டோல்கேட்டில் யாசகம் பெற்று வந்திருக்கிறார். வழக்கம் போல 16-ம் தேதி மாலையில் அவர் அங்கு வசூல் செய்திருக்கிறார். 17-ம் தேதி அதிகாலை 2 மணிக்கு வீட்டுக்குச் செல்வதற்காகப் பேருந்துக்குக் காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரியின் ஓட்டுநரும் கிளீனரும் அவரை லாரியில் ஏற்றியுள்ளனர்.
பின்னர், லாரியில் வந்த திருநங்கை நெல்லை புறநகர் பகுதியான ரெட்டியார்பட்டி மலைப்பகுதியில் ரத்த காயங்களுடன் கிடந்துள்ளார். அந்த வழியாகச் சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (18-ம் தேதி) உயிரிழந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நான் டோல்கேட்டில் இருந்து 7385 என்ற என்ற கொண்ட லாரியில் ஏறியதும், அதிலிருந்த டிரைவரும் கிளீனரும் என்னை பாலியல் தொல்லை செய்தார்கள். நான் லாரியை நிறுத்தச் சொல்லியும் கேட்கவில்லை. நான் கூச்சலிட்டதால் என்னை ரெட்டியார்பட்டி மலைக்கு அருகில் வைத்து அடித்து உதைத்தார்கள். `லாரியில் இருந்த 11,000 ரூபாய் பணத்தைக் கொடு’ என அடித்தார்கள். பின்னர் என் நெற்றியில் சுத்தியலால் கடுமையாகத் தாக்கிவிட்டு கீழே தள்ளிவிட்டுச் சென்றுவிட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்துவிட்டார். இது தொடர்பாக நெல்லை மாநகரம் பெருமாள்புரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து தப்பிச் சென்ற லாரியின் டிரைவர், கிளீனரைத் தேடிவருகிறார்கள். குறிப்பிட்ட நேரத்தில் டோல்கேட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து லாரியை அடையாளம் காணும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

திருநங்கையை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியதுடன் சரமாரியாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருநங்கைகள் வலியுறுத்துகின்றனர்.