சேலம்: ஏற்காட்டில் குரங்கை விரட்டியபோது தந்தையின் கையில் இருந்து தவறி விழுந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஏற்காடு நாகலூர் மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் நிஷாத் (29). தனியார் எஸ்டேட்டில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மாலதி (24). இவர்களுக்கு இரண்டு மாத ஆண் குழந்தை இருந்தது. கடந்த 15-ம் தேதி குடும்பத்துடன் கடைக்குச் சென்ற நிஷாத் வீடு திரும்பினார். மாலதி வீட்டுக் கதவை திறக்க, நிஷாத் குழந்தையுடன் நின்றிருந்தார்.
அப்போது, அங்கு வந்த ஒரு குரங்கு நிஷாத் வைத்திருந்த பையில் உள்ள பொருட்களை பறித்தது. குரங்கை நிஷாத் விரட்டிய போது, எதிர்பாராத விதமாக கையில் இருந்த குழந்தை தவறி கீழே விழுந்தது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக நாகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை சேர்த்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இது குறித்து ஏற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.