புதுடில்லி: ‘சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி விஜயா தஹில்ரமணி எந்தக் குற்றமும் செய்ய வில்லை. இதனால் சி.பி.ஐ., எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை’ என, லோக்சபாவில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த, 2018ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விஜயா தஹில்ரமணி நியமிக்கப் பட்டிருந்தார்.
இந்நிலையில்,2019ல் அவரை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற ‘கொலீஜியம்’ பரிந்துரைத்தது.
இந்த இடமாற்றத்தை ரத்து செய்யும்படி நீதிபதி விஜயா தஹில்ரமணி விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
உளவுத் துறை அளித்த அறிக்கையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு அப்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டிருந்தார்.
இது தொடர்பான கேள்விக்கு லோக்சபாவில் மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங், எழுத்துப்பூர்வமாக தற்போது அளித்த பதிலில் கூறப்பட்டுஉள்ளதாவது:
இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமைப் பதிவாளர் சி.பி.ஐ.,க்கு சில குறிப்புகள் அளித்திருந்தார்.
நீதிபதி விஜயா தஹில்ரமணி எந்தக் குற்றமும் செய்யவில்லை என, இதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதைஅடுத்து அவர் மீது சி.பி.ஐ., எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
இவ்வாறு பதிலில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement