பாகல்கோட் : கர்நாடகாவில், மகளைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்ற கோபத்தில், மருமகனை கத்தியால் குத்திக் கொலை செய்த மாமனாரை, போலீசார் கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டம் ஜமகன்டி டக்கோடா கிராமத்தைச் சேர்ந்தவர் புஜபலி கர்ஜகி, 34. இவர் இதே கிராமத்தில் வசிக்கும் பாக்யஸ்ரீ, 25, என்பவரைக் காதலித்தார்.
புஜபலி கர்ஜகி, ஜெயின் சமுதாயத்தையும், பாக்யஸ்ரீ ஷத்திரிய சமுதாயத்தையும் சேர்ந்தவர்கள். இதனால் இவர்களின் திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைப் பொருட்படுத்தாமல் சில மாதங்களுக்கு முன், காதலர்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர், தன் மகளை திருமணம் செய்து கொண்டதால், பாக்யஸ்ரீயின் தந்தை தம்மனகவுடா பாட்டீல், 58, கோபமடைந்தார்.
கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு ஆஞ்சநேயர் சுவாமி பல்லக்கு உற்சவம் நடந்தது. இதைப் பார்ப்பதற்காக புஜபலி கர்ஜகி, தன் சகோதரர் மகன் சுமேதுடன் வந்திருந்தார். உற்சவம் முடிந்த பின், பைக்கில் வீட்டுக்கு புறப்படத் தயாரானார்.
அப்போது தன் நண்பர்களுடன் அங்கு வந்த தம்மனகவுடா, மிளகாய்ப் பொடியை மருமகன் புஜபலி கர்ஜகி முகத்தில் வீசினார். பின் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதைப் பார்த்து பயந்த, சுமேத் ஓடி விட்டார்.
தகவலறிந்து அங்கு வந்த சாவளகி போலீசார், தம்மனகவுடா பாட்டீலை, கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் தலைமறைவாகி உள்ளனர். அவர்களை போலீசார் தேடுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்