பழநி மலைக்கோயிலில் 11 லட்சம் பேர் தரிசனம்: கோயிலுக்கு ரூ.19.24 கோடி வருமானம்

பழநி: ஐயப்ப சீசன் எதிரொலியாக  பழநி மலைக்கோயிலில் கடந்த 28 நாட்களில் 11 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தற்போது ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகளவு உள்ளது. நவ. 17ம் தேதியிலிருந்து கடந்த 15ம் தேதி வரை, 28 நாட்களில் பழநி கோயிலில் 10.84 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். ரோப்கார் மூலம் 1.07 லட்சம் பக்தர்களும், வின்ச் மூலம் 1.72 லட்சம் பக்தர்களும் மலைக்கோயிலுக்கு சென்றுள்ளனர்.

மலைக்கோயில் அன்னதானத் திட்டத்தில் 1.48 லட்சம் பக்தர்கள் உணவருந்தி உள்ளனர். பழநி கோயில் மூலம் வழங்கப்படும் விலையில்லா பஞ்சாமிர்த பிரசாதத்தை 3.97 லட்சம் பக்தர்கள் சாப்பிட்டுள்ளனர்.கோயிலில் பஞ்சாமிர்த விற்பனை மூலம் ரூ.8.58 கோடி வருமானம் வந்துள்ளது. கோயில் லட்டு முறுக்கு, அதிரசம், புளியோதரை மற்றும் சர்க்கரை பொங்கல் விற்பனை மூலம் ரூ.70.03 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.  உண்டியல் எண்ணிக்கை மூலம் ரூ.3.75 கோடி வருமானம் கிடைத்துள்ளது.

கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்த வகையில் உண்டியல் பஞ்சாமிர்த  பிரசாத விற்பனை, தங்க ரதம்,  தங்கத் தொட்டில், தரிசன கட்டண சீட்டு விற்பனை மற்றும் இதர சேவை கட்டணங்கள் மூலம் கோயிலுக்கு ரூ.19.24 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக பழநி கோயில் இணை ஆணையர் நடராஜன் தெரிவித்துள்ளார். மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று ரோப் கார் இயங்காது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.