முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு அப்போதைய பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் “சமூக பொறுப்புணர்வு மற்றும் முன்னாள் மாணவர்கள் பங்களிப்பு திட்டம்” என்ற பெயரில் திட்டத்தை துவங்கி வைத்தார். இந்தத் திட்டத்திற்காக www.contribute.tnschools.gov.in என்ற பிரத்தியேக இணையதளம் துவங்கப்பட்டு அதன் மூலம் நன்கொடைகள் மற்றும் பங்களிப்பு நிதியை வழங்கும் வகையில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த திட்டமும் அதற்கான இணையதளமும் முடக்கப்பட்டது. இந்த நிலையில் “நம்ம ஸ்கூல்” என்ற பெயரில் அதே திட்டத்தை புதிய பெயரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று துவங்கி வைக்கிறார். இதற்கான நிகழ்ச்சி கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இதேபோன்று மத்திய அரசின் தன்னால்வர்கள் பயிற்றுவிக்கும் திட்டத்திற்கு “இல்லம் தேடிய கல்வி”என்றும், அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மாதிரி பள்ளி திட்டத்திற்கு “சீர்மிகு பள்ளி திட்டம்” என்றும், மத்திய அரசின் ராஷ்ட்ரிய அபிஷ்கார் அபியான் திட்டத்திற்கு “வானவில் மன்றம்” என்ற பெயரிலும் திமுக ஆட்சியில் புதிய பெயர்கள் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக அதிமுக தொண்டர்கள் இணையதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.