பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்நிறுவனத்தை விலைக்கு வாங்கியதிலிருந்து எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதனால் சமூக ஊடகங்களில் அதிக பேசு பொருளாகி வரும் ட்விட்டர் நிறுவனத்தின் CEO எலான் மஸ்க், “நான் ட்விட்டர் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா? இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளுக்கு நான் கட்டுப்படுவேன்” என்று ட்வீட் செய்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் 18 அன்று சமூக ஊடக தளத்தில் ஒரு கருத்துக்கணிப்பைத் தொடங்கினார், அதில் ட்விட்டர் நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமா என்று கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி கருத்துக் கணிப்பு முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன் என்றும் கூறியிருக்கிறார்.
மற்ற சமூக ஊடக நிறுவனங்களை விளம்பரப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்ட கணக்குகள் மற்றும் போட்டி தளங்களுக்கான இணைப்புகள் ஆகியவற்றைத் தடை செய்த ட்விட்டரின் Sunday policy-ஐ புதுப்பித்த பிறகு இந்த கருத்துக்கணிப்பினை மஸ்க் வெளியிட்டுள்ளார். இந்தக் கருத்துக் கணிப்புக்கு 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயனர்கள் ‘ஆம்’ என்று கிளிக் செய்துள்ளனர் மற்றும் சுமார் 42.4 சதவீதம் பேர் ‘இல்லை’ என்பதைக் கிளிக் செய்துள்ளனர்.
வாக்கெடுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மஸ்க் மன்னிப்புக் கேட்டு, “முன்னோக்கிச் செல்லும்போது, முக்கியமான கொள்கை மாற்றங்களுக்கான வாக்கெடுப்பு இருக்கும். என ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற விரும்பவில்லை என்று மஸ்க் கூறியிருந்தார்.
அந்த வேலைக்கு வேறு ஒருவரைக் கண்டுபிடிப்பார் என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார். அவர் சமீபத்தில் ,குறிப்பாக டெஸ்லாவின் முக்கிய பங்குதாரர்களால் தனது மற்ற வேலைகளைப் புறக்கணித்ததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார்.
வாக்கெடுப்பு டிசம்பர் 19, GMT 11:20க்கு முடிவடையும் என்று திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் மஸ்க் பதவி விலக வேண்டும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறினால், அவர் எப்போது பதவி விலகுவார் என்ற விவரங்கள் தெரியவரவில்லை.
-அருணா ஆறுச்சாமிSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM
