’கம்பி கட்டும் கதைகளை சொல்ல வேண்டாம்’ அண்ணாமலையை விளாசிய அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைபோர் எழுந்திருக்கிறது. அண்ணாமலை கட்டியிருக்கும் கைக்கடிகாரம் தொடர்பாக எழுந்த சர்சை குறித்து டிவிட்டர் பக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். அந்த பதிவில், ” 4 ஆடுகள் மட்டுமே வளர்த்து, 5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு பதிவை டிவிட்டரில் பதிவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, அதில் ” சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்தும் ‘பல்பு’ வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் என்ன வெளியிடுவது? யார் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ள முடியும்.

வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக் கொண்டது போல ரஃபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவதுதான் தேசபக்தியா? இதுதான் நீங்கள் அளந்துவிடும் Made in India வா?. தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021 -ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்ச ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல்தான் தயார் செய்ய வேண்டுமா?” என கடுமையாக சாடியிருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.