2023ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரேசன் கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்! அமைச்சர் சக்கரபாணி

சென்னை: 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நியாயவிலை கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்றார்.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தல் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த காலத்தை விட 3 முதல் 4 மடங்கு அதிகமாக அரிசி கடத்தலை தடுத்துள்ளோம் எனவும் கூறினார்.  இனி வரும் காலங்களில் முற்றிலும் ரேசன் அரிசி கடத்தல் தடுக்கப்படும் எனவும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஏற்கனவே மத்தியஅரசு மத்திய அரசு செறிவூட்டப்பட்ட அரிசியை அறிமுகப்படுத்தி உள்ளது.  இந்தியாவில் பெண்கள், குழந்தைகள் மத்தியில் பரவலாக ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது. இந்தச் சவாலை எதிர்கொள்ளவே செறிவூட்டப்பட்ட அரிசி அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலும் அடுத்த ஆண்டு முதல் செறிவூட்டப்பட்ட அரிசி ரேசனில் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? – செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம். இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் பி12 ஆகிய சத்துக்கள் சேர்க்கப்பட்ட அரிசிதான் செறிவூட்டப்பட்ட அரிசி. வழக்கமான அரிசியில் இந்த ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகின்றன. ஆனால், அவை சேர்க்கப்படும் விதம் பல உள்ளன.

அரிசியில் நுண்ணூட்டத்தை வழங்க கோட்டிங், டஸ்டிங் மற்றும் எக்ஸ்ட்ரூஷன் போன்ற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் எக்ஸ்ட்ரூட்டர் என்ற கருவியைப் பயன்படுத்தி செறிவூட்டப்பட்ட அரிசி உருவாக்கப்படுகிறது. இவை வழக்கமான அரிசியுடன் சேர்க்கப்பட்டு வழங்கப்படும். இந்த அரசியின் பைகளில் (+F) என்று எழுதப்பட்டிருக்கும். இத்துடன் Fortified with Iron, Folic Acid, and Vitamin B12 என்ற வாக்கியம் அச்சிடப்பட்டிருக்கும்.

செறிவூட்டப்பட்ட அரிசியின் அவசியம் என்ன?  அதற்கு அரிசியை ஏன் தேர்வு செய்ய வேண்டும் என்பதற்கும் நம் உணவுப் பழக்கவழக்கத்திலேயே உதாரணம் உள்ளது. அரிசி இந்தியர்களின் முக்கிய உணவு. இந்தியாவில் தனிநபர் ஒருவர் ஒரு மாதத்திற்கு சராசரியாக 6.8 கிலோ அரிசியை உண்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, அரிசியை நுண்ணூட்டச் சத்துக்களுடன் செறிவூட்டுவது ஏழைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்க உதவும் என மத்திய அரசு கணித்துள்ளது. இதற்கான அளவை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வகுத்துள்ளது.

அதன்படி 1 கிலோ அரிசியில் 10 கிராம் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்க்கப்படும். இதில் இரும்புச் சத்து 28 mg-42.5 மில்லி கிராம், ஃபோலிக் அமிலம் 75-125 மைக்ரோகிராம், மற்றும் வைட்டமின் B-12 0.75-1.25 மைக்ரோகிராம் இருக்கும். அதே அரிசியில் துத்தநாகம் 10 mg-15 mg, வைட்டமின் A 500-750 மைக்ரோகிராம் RE, வைட்டமின் B-1, 1-1.5 மி.கிராம், வைட்டமின் B-2 (1.25 mg-1.75 மி.கிராம்), வைட்டமின் B-3 (12.5 மி.கிராம் -20 மி.கிராம்) மற்றும் வைட்டமின் B-6 (1.5-2.5 மி.கிராம்) இருக்கும். இந்த அரிசியை வழக்கமான அரிசியை சமைப்பது போல்தான் சமைக்க வேண்டும். சமைத்தபின்னர் இதில் எந்த வித்தியாசமும் இருக்காது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.