புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக சிவனடியார்கள் அறக்கட்டளை சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை ஐ.ஜி பொன் மாணிக்கவேல் கலந்துகொண்டு அடையாள அட்டை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறை மீது எந்த விதமான பழியும் சுமத்த வேண்டாம். அவர்கள் எப்பொழுதும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் உள்ள சிலை பாதுகாப்பு மையங்களில் பெரும்பாலான சிலைகள் போலியானவை. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 813 சிலைகளை ஆய்வு செய்ததில் 197 சிலைகளுக்கு மேற்பட்டவை போலியானவை என கண்டறியப்பட்டுள்ளது. நான் காவல்துறை அதிகாரியாக இருக்கும்போதே போலீ சிலைகள் குறித்தான அறிக்கையை காவல்துறை உயர் அதிகாரிகளிடமும் தமிழக அரசிடமும் சமர்ப்பித்து விட்டேன்.
ஆனால் தற்பொழுது வரை காவல்துறையும், இந்து சமய அறநிலை துறையும், மாநில தொல்லியல் துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் பழமையான ஐந்து ஆதீனங்கள் உள்ளன. அதற்கு ஏதாவது ஒரு ஆபத்து ஏற்பட்டால் நாங்கள் துணை நிற்போம். ஆன்மீகத்தையும் அரசியலும் என்றும் ஒன்றாக சேர்க்க கூடாது. ஆன்மீகம் என்பது புனிதமானது, அரசியல் என்பது சாக்கடை” என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.