நயன்தாராவின் கனெக்ட் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!

இயக்குனர் அஸ்வின் சரவணன் தனது முந்தைய படங்களில் தான் எப்படிப்பட்ட இயக்குனர் என்பதை நிரூபித்து காட்டியுள்ளார், அந்த வகையில் அவர் நயன்தாராவை வைத்து கனெக்ட் என்ற படத்தை இயக்கியுள்ளார்.  இடைவெளி இல்லாமல் 99 நிமிடம் படம் என்ற ஒரு புதிய முயற்சியில் பட குழு இறங்கி இருந்தது. இந்த படத்தின் டிரைலர் வெளியானதில் இருந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் கண்டிப்பாக இடைவெளி வேண்டும் என்று கோரிக்கை வைத்ததால் படக்குழு இடைவேளை விட சம்மதித்துள்ளது.  விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்தில் நயன்தாரா, சத்யராஜ், வினை, அனுபம் கெர் போன்றவர்கள் நடித்துள்ளனர்.  படம் வெளியாவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பே பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி போடப்பட்டது.

நயன்தாரா தனது அப்பா சத்யராஜ் கணவர் வினை மற்றும் தனது மகள் ஹனியாவுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.  2020 ஆம் ஆண்டு கொரோனா தாக்கத்தினால் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி விடுகின்றனர், மருத்துவரான வினை கொரோனாவால் இறந்து விடுகிறார்.  இதனால் மிகுந்த சோகத்திற்கு ஆளான நயன்தாரா மற்றும் மகள் ஹனியாவிற்கும் கொரோனா தாக்கம் ஏற்படுகிறது.  தந்தை இழந்த சோகத்தில் இருந்த மீளாத ஹனியா மந்திரத்தின் மூலம் தனது தந்தையிடம் பேச முயற்சிக்கிறார், அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கெட்ட ஆவி அவர் உடம்புக்குள் புகுந்து விடுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை கனெக்ட் படத்தின் கதை.

 

தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என்று வழக்கமான ஒரு ஃபார்முலா உள்ளது, கனெக்ட் படமும் கிட்டத்தட்ட அதே பார்முலாவில் இருந்தாலும் இது சற்று தள்ளி நிற்கிறது. காரணம் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் படம் எடுக்கப்பட்டிருக்கும் விதம்.  படத்தில் மொத்தமாகவே நான்கு முதல் ஐந்து கதாபாத்திரங்கள் மட்டுமே உள்ளனர், இவர்களை மட்டுமே வைத்து 99 நிமிடத்திற்கு சூப்பரான ஒரு ஹாரர் திரில்லர் படத்தை இயக்கியுள்ளார் அஸ்வின் சரவணன்.  காட்சிக்கு காட்சி அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஒரு பயம் படம் பார்ப்பவர்களுக்கும் ஏற்படுகிறது, இதுவே இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.

 

நயன்தாரா மற்றும் சத்யராஜ் வழக்கம்போல நடிப்பில் அசத்தியுள்ளனர். படம் முழுக்கவே ஒரு கேமரா முன் அமர்ந்து பேசும் படியான காட்சிகள்தான், ஆனாலும் அதனை சிறப்பாகவே கையாண்டு அசத்தியுள்ளார்.  நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் ஹனியா என்ற பெண்ணும் சிறப்பாக நடித்துள்ளார்.  இரண்டாம் பாதியில் வரும் அனுபம் கெர் படத்திற்கு பக்க பலமாக உள்ளார்.  இவர்களைத் தாண்டி படத்தின் முக்கிய நாயகர்கள் என்றால் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி, இசையமைப்பாளர் ப்ரீத்தி சந்திரசேகர், எடிட்டர் கெவின் ரிச்சர்ட் மற்றும் சவுண்ட் டிபார்ட்மெண்ட்டை சொல்லலாம்.  இவர்கள் நான்கு பேரும் ஒரு தரமான ஹாலிவுட்க்கு நிகரான ஒரு ஹாரர் படத்தை தமிழில் கொடுக்க முயற்சி செய்துள்ளனர்.  படத்தில் ஆங்காங்கே சில லாஜிக் கேள்விகள் இருந்தாலும் திரைக்கதையில் ரசிகர்களை மூழ்கடித்து விடுகின்றனர்.  கண்டிப்பாக ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்கில் இந்த படத்தை பார்த்தால் பயப்படாமல் யாரும் வெளியில் வர முடியாது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.