திருச்சி சிறப்பு முகாமில் இருந்த இலங்கையை சேர்ந்த 9 பேரை கைது செய்தது என்ஐஏ

திருச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டுவதற்காக ஆயுதங்கள், போதைப் பொருட்களை கடத்த முயன்ற வழக்கில் இலங்கையைச் சேர்ந்த 9 பேரை என்ஐஏ அதிகாரிகள் திருச்சி சிறப்பு முகாமில் நேற்று கைது செய்தனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களை தங்கவைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் செயல்பட்டு வருகிறது. இங்கு இலங்கைத் தமிழர்கள் 80 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 132 பேர் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர்.

இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரூட்டும் வகையில் பாகிஸ்தானிலிருந்து இந்தியா மற்றும் இலங்கைக்கு ஆயுதங்கள், போதைப் பொருட்கள் கடத்தப்படுவது தொடர்பாக என்ஐஏ(தேசிய புலனாய்வு முகமை) ஜூலை 8-ம் தேதி தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது.

இது தொடர்பாக திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்களான குணசேகரன், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா மற்றும் ஆயுதங்கள், போதைப் பொருள் விற்பனையாளரான பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலீம் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால், தமிழகத்தில் சென்னை, திருப்பூர், செங்கல்பட்டு உட்பட 22 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஜூலை 20-ம் தேதி சோதனையில் ஈடுபட்டனர்.

திருச்சி சிறப்பு முகாமில், என்ஐஏ டிஐஜி காளிராஜ் மகேஷ்குமார் தலைமையில் எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கமாண்டோ படையினரின் பாதுகாப்புடன் சோதனை நடத்தினர். அப்போது, சிறப்பு முகாமிலிருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க், லேப்டாப், வைஃபை மோடம் மற்றும் முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப் பட்டன. அவற்றை கேரளா கொண்டு சென்ற என்ஐஏ அதிகாரிகள், தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.

என்ஐஏ எஸ்.பி. தலைமையில்..: இந்நிலையில், எஸ்.பி. தர்மராஜ் தலைமையில் என்ஐஏ அதிகாரிகள் குழுவினர் 8 பேர் நேற்று காலை மீண்டும் திருச்சி சிறப்பு முகாமுக்கு வந்து, அங்கிருந்த இலங்கையைச் சேர்ந்த குணசேகரன் (எ) பிரேம்குமார், புஷ்பராஜா (எ) பூக்குட்டி கண்ணா, முகமது ஆஸ்மின், அழக பெருமக சுனில் காமினி பொன்சேகா (எ) கோட்ட காமினி, ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ (எ) பொம்மா, தனுகா ரோஷன், லடியா, காமேஷ் சுரங்கா பிரதீப் (எ) வெள்ள சுரங்கா, திலீபன் ஆகிய 9 பேரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர்.

அப்போது, ஏற்கெனவே தொடரப்பட்ட ஆயுதக் கடத்தல் வழக்கில், குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்கள் இருப்பதால், 9 பேரையும் கைது செய்ய வந்திருப்பதாக என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, வெளிநாட்டினருக்கான சிறப்பு முகாம் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் என்ஐஏ எஸ்.பி தர்மராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று ஆட்சியர் மா.பிரதீப்குமாருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, 9 பேர் மீதுள்ள வழக்கு விவரங்கள், கைது செய்வதற்கான உரிய ஆவணங்களை ஒப்படைக்கும்படி ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

அதன்பேரில், என்ஐஏ அதிகாரிகள் அளித்த ஆவணங்களை ஏற்று, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் கைது செய்து சிறப்பு முகாமிலிருந்து அழைத்துச் செல்ல ஆட்சியர் அனுமதியளித்தார்.

இதையடுத்து, குணசேகரன் உள்ளிட்ட 9 பேரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அனைவரும் பலத்த பாதுகாப்புடன் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.