புதுடெல்லி: பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை (பிஎம் ஜிகேஏஒய்) வரும் மார்ச் வரை நீட்டித்தால் ரூ.40 ஆயிரம் கோடி கூடுதல் செலவாகும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2020-ல் நாட்டில் கரோனா பாதிப்பு அதிகமானபோது மார்ச் மாதம் பொது முடக்கத்தை அரசு அமல்படுத்தியது. அப்போது முதல் பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு மாதம்தோறும் ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கான மானியத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது.
தற்போது வரை இந்த இலவச உணவு தானிய விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை முடிந்துள்ள 7 கட்ட திட்டத்துக்காக மத்திய அரசு ரூ.3.9 லட்சம் கோடியை செலவழித்துள்ளது. வரும் 2023 மார்ச் வரை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசுக்கு இன்னும் ரூ.40 ஆயிரம் கோடி தேவைப்படும்.
தற்போது மத்திய அரசு தொகுதியில் 159 லட்சம் டன் கோதுமை கையிருப்பு உள்ளது. கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் மார்ச் வரை நீட்டிக்கப்பட்டால், இந்தத் தொகுப்பிலிருந்து மேலும் 68 லட்சம் டன் கோதுமை செலவு செய்யப்படும். 2023 ஏப்ரல் 1-ம் தேதி நிலவரப்படி அப்போது மத்திய அரசு தொகுப்பில் 91 லட்சம் டன் கோதுமை கையிருப்பு இருக்கும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.