இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக சரக்கு மற்றும் சேவை வரி (Goods and Services Tax) எனப்படும் GST, 2017 -ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது.

புதிதாக நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு பற்றி பலருக்கும் புரியாதநிலையில், கணக்கு தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது. இதை எளிமையாக நடைமுறைப்படுத்த மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினர் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து, வரி கணக்கு தாக்கல் செய்வதிலும், வரி விகிததிலும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்நிலையில் தற்போது ஜிஎஸ்டி தணிக்கை நடைபெற்றது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பின்னர் முதல் முறையாக இந்த ஒருங்கிணைந்த வரி தணிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த முதல் இரண்டு நிதியாண்டுகளில் ( 2017-18 மற்றும் 2018-19) கணக்கு தாக்கல் செய்த சில நிறுவனங்களுக்கும், அடுத்து கடந்த இரண்டு நிதியாண்டுகள் முதல் (2019-20 மற்றும் 2020-21), கடந்த ஆண்டு டிசம்பர் வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகள் அடிப்படையிலும் இந்த தணிக்கை நடைபெற்றது.
தணிக்கை செய்த பிறகு, ரியல் எஸ்டேட் மற்றும் நகைக்கடை உட்பட 50,000 நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகாரிகள் நோட்டீஸ்களை அனுப்பியுள்ளனர். கணக்குகளில் முறைகேடு, விதி மீறல்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தவறாக கணக்குகளை சமர்ப்பித்தது, வரி ஏய்ப்பு, போலி ரசீதுகள் தாக்கல் செய்தது, உள்ளீட்டு வரி வரவை (இன்புட் வரி கிரெடிட்) பெற்றது, விற்பனை மற்றும் கொள்முதல், ஏற்றுமதி ஆகியவற்றில் சேவைகள், பொருட்களை தவறாக வகைப்படுத்தியது என பல்வேறு காரணங்களுக்காக இந்த நோட்டீஸ்களை விளக்கம் கேட்டு அனுப்பியுள்ளனர். இதற்கு பதிலளிக்க 15 முதல் 30 நாட்களுக்குள் கெடு விதித்துள்ளனர்.

கடந்த டிசம்பர் வரை 20,000 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதன் பிறகு 30,000 -க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு இதே போல விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். வரி ஏய்ப்புகள், முறைகேடுகளை கண்டறிந்து, ஜிஎஸ்டி வரி வசூலை சரியான முறையில் அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறுகின்றனர்.
பொதுவாக ஜிஎஸ்டி முறைகேடுகள் அதிகமாக நடைபெற வாய்ப்புள்ள துறைகளை சார்ந்த நிறுவனங்களின் கணக்குகள், மற்றும் அது சார்ந்து வரும் புகார்களின் அடிப்படையில், தணிக்கை செய்யப்பட்டன. அதனால் ஜூவல்லரி மற்றும் நவரத்தின விற்பனை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு அதிகஅளவு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதற்கு 15 முதல் 30 நாட்களுக்குள் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என கெடு வித்துள்ளனர்.