காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள பசுமை வழி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை ஏகனாபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி 13 கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பேரணியாக நடைபயணம் மேற்கொண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் உண்டானது. போலீசாரை கண்டித்து போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் சரவண கண்ணன், காஞ்சிபுரம் எஸ்.பி, தாசில்தார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகளின் காலில் விழுந்த கெஞ்சிய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததால் நடை பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட சில பெண்கள் அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாய நிலங்கள் வழியே விமான நிலையம் அமையாதவாறு முடிவு எடுக்க வேண்டும். எங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அரசு முடிவு எடுக்க வேண்டாம் என கோரிக்கை விடுத்தனர். இதனையும் மீறி அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் தற்கொலை போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம் என தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்