மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு எப்போது? – அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

சென்னை: மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு எப்போது என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் 50 ஆயிரம் புதிய விவசாய இணைப்புகளை வழங்குவது தொடர்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வுக்கூட்டத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “இலவச மின்சாரம் கேட்டு பதிவு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு ஏற்ப ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. மேலும் 50,000 விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் நவம்பர் 11ம் தேதி, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது வரை 34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 15 ஆயிரத்து 866 பேருக்கு பொங்கலுக்கு முன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வரை 1.70 கோடி பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மின்சார பயன்பாடு குறித்து இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கு எடுப்பதற்கு ஏற்பத்தான் தற்போது பணியாளர்கள் உள்ளனர். ஸ்மார்ட் மீட்டர் பொறுத்த டெண்டர் விடப்பட உள்ளது. எனவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தக்கூடிய பணிகள் முடிவடைந்த பின்னர் மாதந்தோறும் மின் அளவு கணக்கீடு செய்யப்படும். 2030 ஆண்டிற்குள் 65 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்ற வருகின்றன. இது தற்போது உள்ள தேவையை விட இரண்டு மடங்கு அதிகம்.” இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.