விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மீனம்பூர் ஊராட்சியில் உள்ள ஏரியில் அரசு அனுமதி பெறாமல் மணல் கொள்ளை நடப்பதாக விசிகவை சேர்ந்த அப்ரார் உசேன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து அதை விழுப்புரம் செஞ்சி பகுதிகளில் ஒட்டினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திமுகவை சேர்ந்த மீனம்பூர் கிராம ஊராட்சித் தலைவர் முன்வர், அவரது மகன் லியாகத் மற்றும் சிலர் அப்ரார் உசேன் காரில் செல்லும்போது வழிமறித்துக் கடுமையாகத் தாக்கி அவரது கார் கண்ணாடியை உடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இந்தச் சம்பவம் குறித்து இரு தரப்பினரும் செஞ்சி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் 27 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து திமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவர் முன்வர் மற்றும் அவரது மகன் லியாகத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்பொழுது ஊராட்சித் தலைவர் முன்வருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி செஞ்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் கைது நடவடிக்கையின் போது திமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் செஞ்சி பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.