திருச்சி உள்பட 4 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகை: ஒன்றிய அரசு முடிவு

புதுடெல்லி: அடுத்த 3 ஆண்டுகளில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய தமிழகத்தின் முக்கியமான 4 விமான நிலையங்கள் உட்பட நாடு முழுவதும் 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு சொத்துக்களை தனியாருக்கு குத்தகை விட்டு அதன் மூலம் நிதி திரட்டும் தேசிய பணமாக்கல் திட்டம் கடந்த 2021-22ம் ஆண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள அரசு சொத்துக்களை குத்தகைக்கு விட்டு ரூ.6 லட்சம் கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, கடந்த ஆண்டு டெல்லி, மும்பை, லக்னோ, அகமதாபாத், மங்களூரு, ஜெய்ப்பூர், கவுகாத்தி, திருவனந்தபுரம் ஆகிய 8 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட்டன. குஜராத்தின் அதானி நிறுவனம் திருவனந்தபுரம் உள்ளிட்ட விமான நிறுவனங்களின் செயல்பாடு மேலாண்மை மற்றும் மேம்பாட்டுக்கான குத்தகையை பெற்றுள்ளது.

இந்நிலையில், 2022-2025ம் ஆண்டுக்குள் மேலும் 25 விமான நிறுவனங்களை குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்திருப்பதாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று மாநிலங்களவையில் தெரிவித்தார். அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘தேசிய பணமாக்கல் திட்டத்தின் கீழ், 2022 முதல் 2025ம் ஆண்டுக்குள் இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை,  திருச்சி,  மதுரை,கோவை,  புவனேஸ்வர், வாரணாசி, அமிர்தசரஸ்,  

இந்தூர், ராய்ப்பூர், கோழிக்கோடு, நாக்பூர், பாட்னா, சூரத், ராஞ்சி, ஜோத்பூர், விஜயவாடா, வதோதரா, போபால், திருப்பதி, ஹுப்ளி, இம்பால், அகர்தலா, உதய்பூர், டேராடூன் மற்றும் ராஜமுந்திரி ஆகிய 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. விமான நிலையங்களை குத்தகைக்கு விடுவதன் மூலம் வரும் வருவாயை, ஒன்றிய அரசு நாடு முழுவதும் விமான நிலையங்களின் உள்கட்டமைப்புகளுக்காக செலவிட்டு வருகிறது’ என்றார்.

இதன் மூலம் சென்னை, மதுரை, கோவை, திருச்சி  ஆகிய தமிழகத்தின் முக்கியமான 4 விமான நிலையங்களும் தனியார் வசம் செல்ல உள்ளது. இதில், 2022ம் நிதியாண்டில் திருச்சி விமான நிலையமும், 2023ம் நிதியாண்டில் கோவை, மதுரை விமான நிலையங்களும், 2024ம் நிதியாண்டில் சென்னை விமான நிலையமும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட உள்ளது. இந்த 25 விமான நிறுவனங்கள் குத்தகை விடப்படுவதன் மூலம் ரூ.13,945 கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.