புதுடில்லி :அரசின் திட்டங்கள் குறித்தும், உச்ச நீதிமன்றம் குறித்தும் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வந்த மூன்று ‘யு டியூப்’ சேனல்களை மத்திய அரசு கண்டுபிடித்துள்ளது.
மத்திய அரசின் பத்திரிகை தகவல் தொடர்பு துறையின் உண்மை கண்டறியும் குழு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வரும் யு டியூப் சேனல்கள் குறித்து உண்மை கண்டறியும் குழு கண்காணித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், இதுபோல பொய் தகவல்களை பரப்பி வந்த, 100க்கும் மேற்பட்ட யு டியூப் சேனல்கள் கண்டறியப்பட்டு, அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் பல்வேறு துறைகள் குறித்தும், உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வந்த மூன்று யு டியூப் சேனல்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.
‘நியூஸ் ஹெட்லைன்ஸ், சர்காரி அப்டேட், ஆஜ் தக் லைவ்’ ஆகிய மூன்று யு டியூப் சேனல்கள் தொடர்ந்து பொய் செய்திகளை பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டுடே நிறுவனத்தால் நடத்தப்பட்டு வரும் ஆஜ் தக் சேனலுக்கும், மேலே கூறப்பட்டுள்ள ஆஜ் தக் சேனலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த மூன்று சேனல்களுக்கும் 33 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இவற்றின் பொய் செய்திகள், 30 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது.
இவை, தேர்தல் ஆணையம், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம், அரசின் நிர்வாகம் ஆகியவை குறித்து பொய் செய்திகளை பரப்புகின்றன. இவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்