டி.ஜே.ஹள்ளி : பெங்களூரு டி.ஜே.ஹள்ளியின் வெவ்வேறு பகுதிகளில் விற்கப்பட்டு வந்த 2.70 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு டி.ஜே.ஹள்ளியின் ஷாம்புரா விளையாட்டு மைதானத்தில் போதைப் பொருள் விற்கப்படுவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், நவம்பர் 29ம் தேதி டி.ஜே.ஹள்ளி போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, போதைப் பொருள் விற்று கொண்டிருந்த நேபாள நாட்டின் ஆகாஷ், 29, என்பவரை கைது செய்யப்பட்டார்.
இவரிடமிருந்து, ஒரு கோடியே 39 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4.50 கிலோ எடை கொண்ட ‘சரஸ்’ எனும் கஞ்சா பிசினில் இருந்து தயாரிக்கப்பட்ட போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றை, ஹோட்டல்கள், தொழிலதிபர்கள், பிரபல தனியார் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பதற்காக கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இவை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, யார் விற்றது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இது போன்று, ஷாம்புராவின் ரயில்வே கேட் அருகில் டிசம்பர் 15ம் தேதி நடத்திய சோதனையில், பர்கத், 35, என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2 கிலோ போதை சாக்லேட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்டு, விற்று கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கிடையில், மோதி முக்கிய சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகில் சந்தேகத்திற்கிடமாக ஒரு நபரிடம் விசாரணை நடத்திய போது, போதைப் பொருள் விற்று கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
அவரிடமிருந்து, 60 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.10 கிலோ போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. நைஜிரியா நபர் கேல்வின் ஜேம்ஸ் என்பவரிடமிருந்து வாங்கியது ஒப்புக்கொண்டார். போதை கடத்தலில் ஈடுபட்ட மேலும் மூன்று் நைஜிரிய பிரஜைகளை தேடி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களை, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப்ரெட்டி நேற்று கமிஷனர் அலுவலகத்தில் பார்வையிட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்