மீண்டும் கொரோனா பொது முடக்கம்? ஜனவரியில் வர உள்ள ஆபத்து!

வெளிநாடுகளில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று ஒன்றிய அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

சீனாவில் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய போது உலகத்தின் அத்தனை மூலைகளிலும் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்று யாரும் நினைக்கவில்லை. 2020, 2021 ஆகிய இரு ஆண்டுகள் முழுவதும் கொரோனா உலகையே தலைகீழாக புரட்டிப் போட்டது. 2022ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் மூன்றாவது அலையின் பாதிப்பு இருந்தது.

உடல் நலம் பாதிக்கப்படுதல், உயிரிழப்புகள், ஒரு பக்கம் என்றால் பொருளாதார பாதிப்பு மிக அதிகளவில் இருந்தது. கொரோனாவாலும் அதன் காரணமாக போடப்பட்ட பொது முடக்கத்தாலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர். அதிலிருந்து தற்போது மெல்ல மீண்டு வர முயற்சித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மீண்டும் சீனாவிலிருந்து அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் உயிரிழக்கின்றனர். இதற்கு முந்தைய வைரஸ்களை விட மிக வேகமாக பரவிவருகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகை அடுத்தடுத்து வரும் நிலையில் பத்து நாள்களில் இந்த வைரஸ் பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

இந்த உருமாறிய வைரஸால் அதிக லட்சக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரேசில், ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இந்த வகை வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ள நிலையில் ஆரம்பத்திலேயே அதைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாநில அரசுகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கொரோனா பரிசோதனைகளை வேகப்படுத்த வேண்டும். பாதிப்பு உறுதியானால் அவர்களது மாதிரிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் இன்று காலை 11 மணியளவில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குநர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்துக்குப் பின்னர் மாநில அரசுகளுக்கு மேலும் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.