பழனி கோயில் குடமுழுக்கு… தமிழில் நடக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ திண்டுக்கல் மாவட்டம், பழனிமலையில் அமைந்துள்ள தமிழ் இறையோன் முருகன் திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை முழுவதுமாகத் தமிழிலேயே நடத்துவது குறித்த அறிவிப்பினை வெளியிடாமல் காலம் தாழ்த்திவரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாகக் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில் குடமுழுக்கு நிகழ்வானது தமிழ் மொழியில் நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது. நீதிமன்ற ஆணையை அரசு ஏற்று அன்றைய அதிமுக அரசு தஞ்சை பெருவுடையார் கோயிலின் குடமுழுக்கினை தமிழ் வழியில் நடத்த ஆவணச் செய்தது. அதனைத் தொடர்ந்து அதே ஆண்டில் டிசம்பர் மாதம் நான்காம் தேதி கரூர் பசுபதீசுவரர் ஆலயக் குடமுழுக்கு குறித்தும் முன்கூட்டியே வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழ் வழியில் குடமுழுக்கு கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. 

இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர்கள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு “தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கோயில்களுக்கும் குடமுழுக்கு நடக்கும்போது தமிழில் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்றும், அதை நிறைவேற்றத் தவறும் கோவில் நிர்வாகத்திற்கு 10 இலட்சம் ரூபாய் அபராதம் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கினார்கள்.

ஆனால், பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழா வருகின்ற 27.01.2023 அன்று நடைபெறவுள்ள நிலையில் அதனைத் தமிழில் நடத்துவதற்கான எவ்வித அறிவிப்பும் இதுவரை கோயில் நிர்வாகம் வெளியிடாதது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் மட்டுமே நடத்தக் கோயில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் திட்டமிட்டுள்ளதோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

ஆகவே, தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் அன்னைத் தமிழிலேயே நடைபெறுவதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், அதுகுறித்த அறிவிப்பாணையை முன்கூட்டியே வெளியிடுமாறும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.