பிரின்ஸ் பட சம்பளத்தை சிவகார்த்திகேயன் செலுத்தக் கோரிய மனு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிரின்ஸ் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாங்கிய சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்தக் கோரி டேக் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டேக் என்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த சிவில் வழக்கில், கே.ஜே.ஆர். ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து சிவகர்த்திகேயன் நடிப்பில் உருவான ஹீரோ படத்தை தயாரிப்பதற்காக 5 கோடி கடனாக பெற்றிருந்ததாகவும், வட்டியோடு சேர்ந்து 6 கோடியே 92 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் தர வேண்டியுள்ளதால், அந்த தொகையை செலுத்த உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தது.
image
இந்நிலையில், தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தை கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் இதுவரை தராததால், சமீபத்தில் வெளியான பிரின்ஸ் திரைப்படத்திற்கு சிவகார்த்திகேயன் பெற்ற சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட வேண்டும் என டேக் என்டேர்டைன்மென்ட் நிறுவனம் கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தபோது, டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் தரப்பில் 2019ஆம் ஆண்டு முதல் வழக்கு நிலுவையில் உள்ளதாலும், அயலான், டான், டாக்டர் போன்ற படங்களின் தயாரிப்பு பணிகளில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டுள்ளதால், பிரின்ஸ் படத்தில் பெற்ற வருமானத்தை இந்த வழக்கின் கணக்கில் செலுத்தும்படி உத்திரவிட வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.
image
சிவகார்த்திகேயன் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, பிரின்ஸ் படத்தில் நடிகர் என்ற முறையில் சம்பளம் பெற்றுக் கொண்டு நடித்ததாகவும், தயாரிப்பு பணிகளுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார். திரைத்துறையில் உள்ள நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடனும், துன்புறுத்தும் வகையிலும் இந்த மனுவை டேக் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தாக்கல் செய்துள்ளதால், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார். ஐந்து படங்களுக்கும் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளர் இல்லை என்பதற்கான ஆதாரமாக சென்சார் போர்டு சான்றிதழ்களை வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் தாக்கல் செய்தார்.
image
இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, சான்றிதழ்களை ஆராய்ந்த நீதிபதி சரவணன், பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு பணிக்கும், சிவகார்த்திகேயனுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதி செய்யப்படுவதால், அவரது சம்பளத்தை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட முடியாது எனக் கூறி டேக் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.