சென்னைக்கு வந்த ஹாக்கியின் ’உலகக் கோப்பை’ – முதல்வரிடம் காண்பித்து வாழ்த்து பெற்ற வீரர்கள்

இந்தியாவின் தேசிய விளையாட்டாகிய ஹாக்கியின் உலகக் கோப்பை போட்டி (2023) இந்தியாவிலேயே நடக்க விருக்கிறது. அப்போட்டியின் கோப்பையை, தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிகள் மற்றும் வீரர்கள் இன்று காலை முதல்வரிடம் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.

ஹாக்கி-2023 ஆண்களுக்கான உலகக் கோப்பை போட்டி ஒடிசா மாநிலம், புவனேஷ்வர்-ரூர்கேலாவில் ஜனவரி 13ஆம் தேதி துவங்க உள்ளது. இந்நிலையில், ஹாக்கி உலகக்கோப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அப்போட்டியின் கோப்பை பயணம் மேற்கொள்கிறது. அப்பயணத்தையொட்டி மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலிருந்து விமானம் மூலமாக இன்று சென்னை வந்தடைந்தது. இந்த கோப்பையை வரவேற்கத் தமிழ்நாடு ஹாக்கி விளையாட்டு சங்கப் பிரதிநிகள் மற்றும் வீரர்கள் விமான நிலையம் சென்றனர்.

image

இதைத் தொடர்ந்து சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உலகக்கோப்பையை முதலமைச்சர் மு.கா.ஸ்டாலினிடம், இந்திய ஹாக்கி செயலாளர் சேகர் மனோகரன், பொதுச் செயலாளர் செந்தில் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். பிறகு உலகக்கோப்பையை முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்.

சென்னை வந்துள்ள ஹாக்கி உலகக் கோப்பையைப் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்குப் பார்வைக்குச் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் திறந்து வைத்த பின் தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அணிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவங்கி வைத்தார்.

image

நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பின்னர் தமிழகத்தின் முன்னாள் ஹாக்கி வீரர்கள் மற்றும் தற்போதைய வீரர்களுக்கு அமைச்சர் மரியாதை செலுத்திய பின் ஹாக்கி உலகக் கோப்பையைக் கேரளாவிற்கு வழங்க உள்ளார்.

image

இந்தியாவிற்காக ஹாக்கி உலகக் கோப்பையை வென்ற இந்தியாவின் முன்னாள் வீரர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல் ஹாக்கி நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் இடம் கொடுத்ததைக் கண்டித்து இந்தியாவின் முன்னாள் வீரர் பாஸ்கரன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அதிகாரிகளிடம் கேள்வி கேட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

– ஷர்நிதா
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.