காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது. இது பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு பெண்களுக்கு, எதிராக கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்து வருகிறது. தலிபான்களின் ஓராண்டு ஆட்சியில், பெண்கள் உரிமைகள் முழுமையாக பறிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, புர்கா அணியாமல் வெளியே செல்லும் பெண்களின் தலை துண்டிக்கப்படுகிறது. நெயில் பாலிஷ் செய்தால் விரல்கள் வெட்டப்படுகின்றன. வேறு ஆண்களுடன் பேசினால் பொது இடத்தில் பெண்கள் கல்லெறிந்து கொல்லப்படுகின்றனர்.
முந்தைய ஆட்சிக்காலத்தில் சுதந்திரமாக அலுவலக பணிக்குச் சென்ற பெண்கள் இப்போது வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். கடந்த, மார்ச் மாதம் 5ம் வகுப்புக்கு மேல் மாணவிகள் கல்வி பயில தடை விதித்தனர். இதன்படி மகளிருக்கான நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன.
இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்வினை ஆற்றிய பின் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. இப்போது ஆப்கனில் மீண்டும் பெண்கள் கல்வி பயில தடை விதித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பெண்கள் கல்வி பயில தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மாணவிகள் கல்லூரிகளுக்கு நுழைய கூடாது என்று ஆப்கானிஸ்தான் உயர்கல்வி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
இது குறித்து காபூல் பல்கலைக்கழக மாணவி கூறுகையில், இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறேன். நான் படித்து என் எதிர்காலத்தை மாற்ற முடியும் அல்லது என் வாழ்வில் ஒளியேற்ற முடியும் என்று நான் நம்பினேன். ஆனால், அதை அவர்கள் அழித்துவிட்டனர். இவ்வாறு அந்த மாணவி கூறினார்.
அமெரிக்கா கண்டனம்
இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கண்டனம் தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. இது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கவும் தலிபான்கள் தலைமையின் எடுக்கப்பட்ட சமீபத்திய முயற்சியாகும்.
ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்