லண்டன், கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சீனாவில் ௧௫ லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக, ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், ௨௦௧௯ இறுதியில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ், உலகெங்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.
இங்கு, மக்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து, சீன அரசு பல கட்டுப்பாடுகளை விலக்கியது. இதையடுத்தே கொரோனா வைரஸ் பரவல் அங்கு அதிகரித்துள்ளது.
பாதிப்பு
இந்த புதிய அலையால், சீனாவில் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்றும், அதிகளவில் உயிர் பலி இருக்கும் என்றும் பல்வேறு ஆய்வுகள் வாயிலாக கணிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலால் இதுவரை ௫,௦௦௦க்கும் மேற்பட்டோர் மட்டுமே உயிரிழந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. ஆனால், அடுத்த ௩ – ௬ மாதங்களில் அங்கு, ௧௩ – ௨௧ லட்சம் பேர் வரை உயிரிழக்க நேரிடும் என, பல ஆய்வுகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த தனியார் அமைப்பு நடத்தியுள்ள ஆய்வில் கூறப்பட்டு உள்ளதாவது:
இந்த ஆய்வு, இது வரையிலான கொரோனா தொற்று பாதிப்பு, மீண்டவர்கள், உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அபாயம்
பல்வேறு நாடுகளில் தடுப்பூசி செலுத்திய பின், மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துஉள்ளது. ஆனால், சீனாவில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உள்ளது.
இது, அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில விலக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதில் இருந்து தெரிய வந்துள்ளது.
இதனால், வரும் சில மாதங்களில் அங்கு, மக்கள்தொகையில் ௬௦ சதவீதம் வரை, அதாவது ௮௪ கோடி பேர் வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படலாம் என்றும், ௧௫ லட்சம் பேர் வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளது என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்