காளமேகப்பெருமாள் திருக்கோயில், திருமோகூர்

காளமேகப்பெருமாள் திருக்கோயில், மதுரை மாவட்டம், திருமோகூரில் அமைந்துள்ளது.

யானை மலையின் நீளம் சுமார் 3 km. இந்த மலையின் முகப்பு யானையின் வடிவத்தை ஒத்துள்ளது.

பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பாற்கடலில் அமிர்தம் கடையும் போது அதிலிருந்து ஒரு துளி அமிர்தம் இக்கோயிலில் உள்ள குளத்தில் விழுந்ததால், இக்கோயில் குளத்திற்கு பெரிய திருப்பாற்கடல், சிறிய திருப்பாற்கடல் என்ற பெயர் உண்டானது.

பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தைத் தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.

காளமேகம் (கருமேகம்) நீரைத் தனக்குள் வைத்துக்கொண்டு, அதை மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும் மழையை தருகிறார். எனவே இவர், “காளமேகப்பெருமாள்” என்று அழைக்கப்படுகிறார். பஞ்சாயுதங்களுடன் காட்சி தரும் இவர், மார்பில் சாளக்ராம மாலை அணிந்து, வலது கையால் தன் திருவடியைக் காட்டியபடி இருக்கிறார். இங்குள்ள உற்சவர், “ஆப்தன்” என்று அழைக்கப்படுகிறார். “நண்பன்” என்பது இதன் பொருள். தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்துணைவனாகவும் அருளுவதால், இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது.

“தூங்கிக்கொண்டிருப்பவரை எழுப்பலாம். ஆனால் தூங்குவது போல நடிப்பவரை எழுப்ப முடியாது” என்பர். இவ்வாறு தூங்குவது போல நடிப்பதை, “கள்ளத்தூக்கம்” என்பர். இத்தலத்தில் கள்ளத்தூக்க கோலத்தில், பெருமாளுக்கு சன்னதி இருக்கிறது. தேவர்கள், தங்களைக் காக்க மகாவிஷ்ணுவிடம் முறையிடச் சென்றபோது அவர், ஏதுமறியாதவர் போல சயனித்திருந்தாராம். தேவர்களுக்கு, சுவாமியின் நித்திரைக்கு இடையூறு இன்றியும், அதே சமயம் தங்களது குறையையும் சொல்ல வேண்டும் என்ற நிலையில், அவரை எழுப்ப விரும்பாத அவர்கள், ஸ்ரீதேவி, பூதேவியிடம் தாங்கள் வந்த நோக்கத்தைச் சொல்லிவிட்டு திரும்பிவிட்டனர். இப்போது தாயார்கள் இருவருக்கும், தேவர்களின் வேண்டுதலை சுவாமியிடம் சொல்ல வேண்டும். அதேசமயம் அவரது நித்திரையைக் கலைக்கக்கூடாது என்ற நிலை. எனவே, அவர்களிருவரும் மனதிற்குள் வேண்டிக்கொள்ளவே, மகாவிஷ்ணு கருணையுடன் கண்திறந்து, மோகினி வடிவில் சென்று தேவர்களுக்கு அருள்புரிந்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்கு பெருமாளுக்கு சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது. இவர் வலது கையை தலைக்கு வைத்து சயனித்திருக்கிறார். பாதத்திற்கு அருகில் தாயார்கள் இருவரும் கைகளை தாழ்த்தி வைத்து, பிரார்த்தனை செய்யும் கோலத்தில் காட்சி தருகின்றனர். இவருக்கு, “பிரார்த்தனை சயனப்பெருமாள்” என்று பெயர். இந்த சன்னதிக்கு கீழே திருப்பாற்கடல் தீர்த்தம் இருப்பதாக ஐதீகம். பாற்கடலின் ஒரு துளி இதில் விழுந்ததால் இப்பெயரில் அழைக்கப்படுகிறது.

நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்களும் இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். அழகர்கோவில் கள்ளழகரையும், திருமோகூர்ப் பெருமாளையும் இணைத்து, “சீராறும் மாலிருஞ்சோலை திருமோகூர்” என்று திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். நம்மாழ்வார், இறைவனை சரணாகதியடைய வேண்டிப் பாடிய திருவாய்மொழியில், இத்தலம் பற்றி பாடியுள்ளார். இங்கு வேண்டிக்கொள்ள மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே சுவாமிக்கு, “மோட்சம் தரும் பெருமாள்” என்றும் பெயருண்டு.

பெருமாள், பெண் வடிவம் எடுத்த தலமென்பதால், அவருக்கு மரியாதை தரும்விதமாக தாயார் மோகனவல்லி, சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது. இவளது சன்னதியில் சடாரி சேவை, தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை. நவராத்திரியின்போது மட்டும் விசேஷ பூஜை செய்கின்றனர். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி, சேர்த்தியாகக் காட்சி தருகிறார். இந்த வைபவம் மூன்று மணி நேரம் மட்டுமே நடக்கும்.

சக்கரத்தாழ்வார் சிலையின் மேல் பகுதியில், மடியில் இரணியனை கிடத்தி சம்ஹாரம் செய்யும் நரசிம்மரும், கீழ் பகுதியில் லட்சுமி வராகரும் காட்சி தருகின்றனர். இவரது திருநட்சத்திர தினமான ஆனி சித்திரையில், விசேஷ ஹோமம் செய்து, எண்ணெய் காப்பிடுகின்றனர்.

சக்கரத்தாழ்வாருக்கு பின்புறமுள்ள நரசிம்மர், நான்கு கரங்களிலும் சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு இல்லை. தற்போது சக்கரத்தாழ்வார் சன்னதியில் தங்க விமானம் அமைக்கும் திருப்பணி நடந்து வருகிறது.

கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே மன்மதன், இரதி சிற்பங்கள் தூண்களில் வடிக்கப்பட்டுள்ளன. அழகில்லாத காரணத்தால் திருமணம் தடைபடுபவர்களும், அழகில்லை என வருந்துபவர்களும் இவர்களிடம் வேண்டிக்கொள்கிறார்கள். ஆண்கள் மன்மதனுக்கும், பெண்கள் இரதிக்கும் சந்தனம் பூசி, நெய் தீபம் ஏற்றி, கல்கண்டு படைத்து வழிபடுகிறார்கள்.

மகாவிஷ்ணு, மோகினி வடிவில் காட்சி தந்த தலமென்பதால் இதற்கு, “மோகன க்ஷேத்ரம்” என்றும், சுவாமிக்கு, “பெண்ணாகி இன்னமுதன்” என்றும் பெயர் உண்டு. திருமோகூர் ஆப்தன், சுடர்கொள்ஜோதி, மரகதமணித்தடன், குடமாடுகூத்தன் என்பது பிற திருநாமங்கள்.

வைகாசி பிரம்மோற்ஸவத்தில் தினமும் சுவாமியுடன், நம்மாழ்வார் காட்சி தருகிறார். ராகு, கேது தோஷ நிவர்த்திக்கு, பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில், ராகு காலத்தில் தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

இங்கு மோட்சதீப வழிபாடு சிறப்பு பெற்றது.

சுவாமிக்கு அபிஷேகம் செய்வித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.