நீலகிரி: உதகை அருகே கூக்கல்தொரை கிராமத்தில் இருந்து கோத்தகிரி செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 200 மீட்டர் நீளத்திற்கு திடீரென ஏற்பட்ட நில சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோத்தகிரி, குன்னூர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. ஓராண்டில் வழக்கமாக பெய்ய கூடிய மழை அளவை விட 2 மடங்கு அதிகமாக மழை பெய்து வந்தது
இந்நிலையில் இன்று உதகை அருகே உள்ள கூக்கல்தொரை பகுதியில் இன்று காலை 200 மீட்டர் நீளத்திற்கு நிலச்சரிவானது ஏற்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலையின் ஒருபகுதி முற்றிலுமாக சரிந்து மண் மற்றும் பாறைகள் அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குல் சென்றுள்ளது. இதனால் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை இந்த நிலச்சரிவு ஏற்பட்டதால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நிலச்சரிவு ஏற்பட்டுள்ள இடத்திற்கு நெடுஞ்சாலைதுறையினர் விரைந்துள்ளனர். ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு சாலையை சீரமைக்கும் பணியானது மேற்கொள்ளப்பட்டவுள்ளது. ஆனால் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி என்பது அதிக நீளமாக இருப்பதனால் அந்த இடத்திற்கு ஜேசிபி இயந்திரங்களை கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது . இதனால் வேறு வழியில் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு சென்று நெடுஞ்சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைதுறையினர் முயற்சித்து வருகின்றனர்.