அமைச்சர் ஆனாலும் உதயநிதி சினிமாவுக்கு உதவி செய்வார்: அமைச்சர் பேச்சு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். விழாவிற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தேனாண்டாள் முரளி தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினர். துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் எஸ். சந்திரபிரகாஷ் ஜெயின் நன்றியுரை ஆற்றினார்.

விழாவில் அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன், விவசாயிக்கு விளைவித்த பொருளுக்கு விலை கிடைக்காத நிலை தான் சினிமாவிலும் இருக்கிறது. சங்கம் நிதி சிக்கலிலும் இருப்பதாக சொன்னார்கள். நம் முதல்வர் தலைமையிலான அரசும் இம்மாதிரியான சிக்கலான நிலையில் தான் அரசை எடுத்து நடத்தி வருகிறார். அவரிடம் உங்கள் கோரிக்கைகளை சொன்னால் எளிதில் புரிந்து கொள்வார். இந்த அரசு சினிமாவுக்கு இணக்கமான அரசாகவே செயல்பட்டு வருகிறது. இந்த அரசு உங்கள் கோரிக்கைகளை கண்டிப்பாக நிறைவேற்றும்.

ஏற்கனவே தொழில் மிகவும் பின்தங்கி இருக்கின்ற நிலையில், கொரோனா பெரிய இடராக இருந்தது.கொரோனாவில் மிகவும் பின் தங்கிய தொழிலில் சினிமா முக்கியமான ஒன்று. இந்த நிலையில் உதயநிதி உதவியாக இருப்பது எனக்கு மிகவும் பக்க பலமாக இருக்கிறது. திரைத்துறையில் இருந்த உதயநிதி ஸ்டாலின், இப்போது அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறார், அவருக்கு இந்த திரைத்துறை பற்றிய அனைத்து விவரங்களும் தெரியும், அதனால் எனக்கு இப்போது பாரம் குறைந்தது போல் இருக்கிறது.

தமிழ் சினிமா மீண்டு வெற்றிப்பாதையில் செயல்பட நீங்கள் குழுவாக இணைந்து என்ன செய்ய வேண்டுமென முடிவெடுத்தால் அதனை அரசாங்கம் செய்ய தயாராக இருக்கிறது. மானியம் வழங்குவது தொடர்பாக முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அது சீக்கிரம் நடக்க ஆவண செய்கிறேன். அதோடு விருது வழங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளையும், நான் முதல்வர் கவனத்திற்கு எடுத்து சென்று, அது விரைவில் நடப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்கிறேன். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.