லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. தனிப்பட்ட வாழ்க்கையில் பல ஏற்ற, இறக்கங்களையும், தனிப்பட்ட விமர்சனத்தையும் சந்தித்தவர் அவர். இருந்தாலும் மனம் தளராத அவர் தொடர் உழைப்பின் காரணமாக தமிழில் நம்பர் 1 நடிகையாக இருக்கிறார். இவர் இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து நடித்துவருகிறார் நயன்.
அந்தவகையில், அஷ்வின் சரவணன் இயக்கத்தில் கனெக்ட் என்ற படத்தில் நடித்திருக்கிறார். சத்யராஜ், வினய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். ப்ரித்வி சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார் நயன். அப்போது அவரை பிரபல தொகுப்பாளின் டிடி என்கிற திவ்யதர்ஷினி பேட்டி எடுத்தார். அந்தப் பேட்டியில் பேசிய நயன் பில்லா படத்தில் கவர்ச்சியாக நடித்தது தொடர்பாக விளக்கமளித்திருக்கிறார்.
அந்தப் பேட்டியில் பேசிய அவர், “பில்லா படம் பண்ணும்போது இயக்குநர் விஷ்ணுவர்தனை தவிர, யாருக்கும் என் மீது நம்பிக்கை இல்லை. முழுக்க முழுக்க கிளாமர் மற்றும் ஸ்டைலிஷாக அதுவரை யாருமே என்னை பார்த்ததில்லை. அந்த நேரம் நிறைய ஹோம்லி கேரக்டர்களில்தான் நடித்துக்கொண்டிருந்தேன். அப்போது விஷ்ணுதான் என் மீது நம்பிக்கை வைத்தார்.
அவரின் மனைவியும் டிசைனருமான அனுவர்தனும் என்னை அதிகம் நம்பினார். அவர் வடிவமைத்த ஸ்டைலிங்கான் காஸ்ட்யூம்ஸ்தான் என்னை த்தியாசப்படுத்தி காட்டியது. இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இருந்ததால், அந்த கதாபாத்திரத்தில் என்னால் கிளாமராக நடிக்க முடிந்தது” என்றார்.
அதனைத் தொடர்ந்து சிவகாசி, சிவாஜி ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியது குறித்து பேசுகையில், “ஒரு பாடலுக்கு நடனமாடுவது உங்கள் இமேஜுக்கு சரியாக இருக்காது. அப்புறம் பாடலுக்கு மட்டும்தான் கூப்பிடுவார்கள் என்றார்கள். அதற்கு, எதோ ஒன்று ஸ்பெஷலாக இருப்பதால்தானே ஸ்பெஷல் பாடலுக்காக கூப்பிடுகிறார்கள், அது நல்லாதான் இருக்கும். நான் முயற்சி செய்கிறேன் என்று சொன்னேன்” என்றார்.