தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சிவா மற்றும் சித்ராதேவி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை எதிரே சூப் மற்றும் ஹோட்டல் நடத்திவரும் இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் சித்ரா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக முத்தனம்பட்டியை சேர்ந்த வைரமுருகன் என்பவரிடம் சிவா விலைக்கு கோழி கேட்டிருந்த நிலையில் சிவா இல்லாத நேரம் கடைக்கு கோழியை ஒருவரிடம் கொடுத்துவிட்டார் வைரமுருகன். அப்போது மனைவி சித்ரா கோழி வேண்டாம் என மறுத்து திருப்பி அனுப்பிவிடவே கோபமடைந்த வைர முருகன் கடைக்கு வந்து சித்ராவை கடுமையாக தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
அதனையடுத்து கடைக்கு வந்த சிவா மீண்டும் அந்தக் கோழியை விலைக்கு வாங்கிக் கொள்ள வற்புறுத்தியிருக்கிறார். அப்போதும் கோபமடைந்து சித்ரா தேவியை தகாத வார்த்தைகளில் திட்டி கடுமையாக சாடிவிட்டு சென்ற வைரமுருகன் மீண்டும் சிறிது நேரத்தில் தனது மகனான மதனை அழைத்துக்கொண்டு வந்து கடையில் தகராறு செய்ததோடு கடையில் உள்ளே இருந்த பாத்திரங்கள் உணவுப் பொருட்களை அடித்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.
இதில் சுடு தண்ணீர் மற்றும் சூப் ஆகியவை உடலில் பட்டதில் படுகாயம் அடைந்த சித்ராதேவி தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கணவர் சிவா கானாவிலக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கும் நிலையில் தற்போது வரை தகராறு செய்தவர்களை போலீசார் கைது செய்யவில்லை என்றும் அவர் வேதனையுடன் கூறி உள்ளார். இந்த தகராறு தொடர்பாக அருகே உள்ள கடையில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி இருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக தலைமறைவாகி உள்ள இரண்டு நபர்களை கானாவிலக்கு போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.