Connect Review: 99 நிமிடங்களில் ஒரு ஹாரர் சினிமா; பயமுறுத்துகிறதா நயன்தாராவின் கனெக்ட்?

ஹாரர் படங்கள் என்றாலே அதில் காமெடியையும் கவர்ச்சியையும் கலந்து கமெர்ஷியல் ஆக்கிவிடுவதுதான் தமிழ் சினிமாவின் சமீபகால டெம்ப்ளேட். அதிலிருந்து விலகி, சீரியஸாக ஹாரர் ஜானரை மட்டுமே கருத்தில்கொண்டு வரும் படங்கள், தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பானதாக அமைந்துவிட்டால், ஹாரர் விரும்பிகளுக்கு நல்லதொரு ட்ரீட்தான். `மாயா’, `கேம் ஓவர்’ என சீரியஸான ஹாரர் மற்றும் சூப்பர்நேச்சுரல் படங்களைக் கொடுத்து கவனம் ஈர்த்த இயக்குநர் அஸ்வின் சரவணனின் `கனெக்ட்’ அந்த வரிசையில் சென்று அமர்கிறதா, இல்லை ஏமாற்றுகிறதா?

Connect Review | கனெக்ட் விமர்சனம்

கொரோனா லாக்டௌன் அறிவிக்கப்பட, அதனால் சிதைகிறது நயன்தாராவின் குடும்பம். மருத்துவரான அவரின் கணவர் வினய் கொரோனாவால் இறந்து போகிறார். நயன்தாராவுக்கும் அவரின் மகளுக்குமே கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் வர நான்கு சுவர்களுக்குள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். வீடியோ காலில் அவ்வப்போது தோன்றும் நயன்தாராவின் அப்பா சத்யராஜ் மட்டுமே அவர்களுக்கான ஒரே ஆறுதல். இப்படியான சூழலில் நயன்தாராவின் மகள் ஹானியா நஃபீஸ் செய்யும் ஒரு காரியத்தால் வீட்டுக்குள் அழையா விருந்தாளியாகப் பேய் ஒன்று வருகிறது. உதவிக்கு ஆளில்லாத லாக்டௌனில் நயன்தாரா அந்தப் பேயைச் சமாளித்து தன் மகளை மீட்டாரா என்பதே இந்த ‘கனெக்ட்’.

மீண்டும் ஒரு சிங்கிள் மதர் பாத்திரத்தில் நயன்தாரா. புதிதாக அவர் ரோலிலும் எதுவுமில்லை என்பதால் அவரது நடிப்பிலும் எந்த மாற்றமும் இல்லை. மகளாக வரும் ஹான்யா நஃபீஸ்தான் ‘கனெக்ட்’டுக்கான பவர்ஹவுஸ். இரு பரிமாணங்களில் வரும் பாத்திரத்தை நன்கு உணர்ந்து அதற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார். ‘ஜம்ப் ஸ்கேர்’ எனப்படும் திடுக்கிடும் காட்சிகளுக்கு அவரின் நடிப்பு பக்கபலமாக இருக்கிறது. குறிப்பாகச் சட்டென்று தமிழிலிருந்து மலையாளத்துக்குத் தாவும் அவரின் வசனங்களுக்கு ஏற்றவாறு உடல்மொழியிலும் மாற்றங்கள் நிகழ்த்திக் கவனிக்க வைக்கிறார். வினய் கௌரவத் தோற்றத்தில் வந்து போனாலும் முன்களப் பணியாளர்களின் துயரங்களை ஆழமாகப் பதிவு செய்கிறார். கடவுள் நம்பிக்கைக் கொண்ட பாத்திரத்தில் வரும் சத்யராஜின் நடிப்பில் குறையேதுமில்லை. முக்கியமான ரோலில் அனுபம் கேர் திரையை ஆக்கிரமிக்கிறார்.

Connect Review | கனெக்ட் விமர்சனம்

ஹாரர், அமானுஷ்யம் போன்ற ஜானர்களிலேயே பயணிக்கும் அஸ்வின் சரவணன், மீண்டும் ஒரு சீரியஸான ஹாரர் படத்தைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். 99 நிமிடங்கள் மட்டுமே ஓடும் படத்தில் தேவையற்ற காட்சிகள் எதுவுமில்லை. பேய்ப் படங்களுக்குப் பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவில் அதீத கவனம் செலுத்தியிருக்கிறது படக்குழு. திடுக்கிடும் காட்சிகளுக்கும், பரபரப்பான காட்சிகளுக்கும் கூடுதல் பதற்றத்தையும் பய உணர்வையும் தருவது அதன் ஒலி அமைப்பே! லாக்டௌன் சினிமா என்பதால் பெரும்பாலும் வீடியோ காலில் மட்டுமே கதாபாத்திரங்கள் உரையாடுகின்றன. அப்படியான வீடியோ காலில் அவ்வப்போது நிகழும் ‘Buffering’-யை வைத்தே திகில் உணர்வைக் கூட்டும் அந்த ஐடியாவும் பாராட்டுக்குரியது.

வீடியோ கால்களில் மட்டுமே உரையாடல், சுவர்களுக்குள் மட்டுமே காட்சிகள்… ஆனால் அவற்றை எந்தக் குழப்பமும் இல்லாமல், சலிப்பும் தட்டாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி; அதைத் திறம்படத் தொகுத்திருக்கிறார் ரிச்சர்ட் கெவின். க்ளைமாக்ஸில் வரும் அந்த நிழல் ஷாட்டும் அதை எடிட் செய்த விதமும், அதிலிருக்கும் குறியீடும் அட்டகாசம். டைட்டிலில் வரும் பிரித்வி சந்திரசேகரின் இசை மிரட்டல். படம் நெடுக அவ்வகை இசை பயணிக்காவிட்டாலும் ஒரு சில காட்சிகளில் த்ரில் உணர்வைக் கூட்டியிருக்கிறது.

Connect Review | கனெக்ட் விமர்சனம்

இப்படி டெக்னிக்கலாக படம் சிறப்பானதாக இருந்தாலும், கதை என்ற விஷயத்தில் ஏமாற்றமே. தோராயமாகப் படத்தை அணுகினால், பேய் பிடித்துவிடுகிறது, அதைப் போராடி விரட்டுகிறார்கள் என்பது மட்டுமே ஒற்றை வரி கதையாக மிஞ்சுகிறது. அது லாக்டௌன் காலத்தில் நிகழ்கிறது என்பது மட்டுமே இதன் ‘மாத்தியோசி’ ஐடியா. ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் சினிமா, வெப்சீரிஸ், ஆந்தாலஜி எபிசோடுகள் எனப் பல லாக்டௌன் கதைகள் ஓ.டி.டி-யிலேயே வந்துவிட்டதால் அதிலும் புதிதாக எதுவுமில்லை.

பேயின் பெயர் தெரிந்துவிட்டால் விரட்டிவிடலாம் என்ற ‘தி கான்ஜுரிங்’ ஐடியாவும், ஹோலி வாட்டர், சிலுவை என ‘தி எக்ஸார்சிஸ்ட்’ காலத்து ஐடியாக்களும் சலிப்பை மட்டுமே ஏற்படுத்துகின்றன. ஹாரர் காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டிருந்தாலும், பல ஹாலிவுட் படங்களில் பார்த்துப் பழகிய விஷயங்களே இதிலும் வருகின்றன. ஹாரர் படங்களிலேயே லயித்திருக்கும் உலக சினிமா ஆர்வலர்களுக்குப் ‘கனெக்ட்’ ஏமாற்றத்தை மட்டுமே தரும்.

Connect Review | கனெக்ட் விமர்சனம்

கதையாக இன்னும் கனம் சேர்த்து, ட்விஸ்ட்கள் வைத்து, அதன் பின்னர் இப்படித் திடுக்கிடும் வகையில் டெக்னிக்கலாகப் பயமுறுத்தியிருந்தால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத ஹாரர் படங்களில் ஒன்றாகியிருக்கும். அந்த வகையில் `கனெக்ட்’டின் கனெக்‌ஷன் சற்றே பலவீனமானதுதான்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.