குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரையுடன் ரூ.1000 பொங்கல் பரிசு! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரி, சர்க்கரையுடன் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கடந்த ஆண்டு 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும் 21 பொருட்களுடன் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிய அசத்திய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஆண்டு வெறும் பச்சரிசி, சர்க்கரையுடன் ரூ.1000 மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.

2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடிட, அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000/- ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கிட முடிவு செய்யப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையில் நடைபெறும். அன்றைய தினமே அனைத்து மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர் பெருமக்களும் தொடங்கி வைக்க உள்ளனர்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ1000 ரொக்கமுடன், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார். ஆனால், அரசு வழங்கிய பொருட்களின் தரம் கடும் விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், இந்த ஆண்டு, வெறும் பச்சரி, சர்க்கரை உடன் ரூ.1000 ரொக்கம் மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.