திமுக டூ திமுக… கோவை மேயரிடம் மனு கொடுத்த கவுன்சிலர்… உடனடியாக பறந்த உத்தரவு!

தமிழகத்தில் முக்கிய மாநகராட்சியில் ஒன்றாக கோவை திகழ்கிறது. நடப்பாண்டு தொடக்கத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து மாநகராட்சிகளையும்

கைப்பற்றியது. அந்த வகையில் கோவையில் திமுக மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பாட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

குறைதீர் கூட்டம்

அவ்வப்போது மாநகராட்சி சார்பில் குறைதீர் கூட்டங்களும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் மிகுந்த கவனம் பெற்றது. வழக்கமாக பல்வேறு வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் தான் நேரில் வந்து மனு அளித்து விட்டு செல்வர். இம்முறை வார்டு கவுன்சிலர் ஒருவர் மனு அளிக்க வந்தார். அதுவும் ஆளும் திமுக அரசை சேர்ந்த கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேயரிடம் மனு

கோவை மாநகராட்சியில் உள்ள 41வது வார்டு கவுன்சிலர் கே.சாந்தி. இவரது வார்டில் சாலைகள் சரியான முறையில் இல்லை என்று சொல்லப்படுகிறது. இவற்றை சரிசெய்து கொடுக்குமாறு மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் மனு அளித்தார். அப்போது கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிச் செல்வன், துணை ஆணையாளர் ஷர்மிளா ஆகியோர் உடனிருந்தனர்.

24 மணி நேர குடிநீர்

கே.சாந்தி அளித்த மனுவில், 41வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலை பி.என்.புதூர் பகுதியில் 24 மணி நேர குடிநீர் வசதிக்காக கடந்த ஓராண்டு காலமாக அனைத்து சாலைகளும் சூயஸ் நிறுவனத்தால் தோண்டப்பட்டு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன. இவை முடியும் தருவாயில் உள்ளன. பி.என்.புதூர் பகுதியில் சில தெருக்களில் மட்டும் சூயஸ் குழாய் பதிக்கும் பணிகள் நிறைவடைந்து 24 மணி நேர குடிநீர் கிடைத்து ஐந்து மாத காலங்கள் ஆகிவிட்டன.

குழி தோண்டிய ஒப்பந்த நிறுவனம்

இருப்பினும் சாலைகள் செப்பனிடப் படவில்லை. எனவே பணி நிறைவு பெற்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் சூயஸ் நிறுவனத்திடம் தடையில்லா சான்று பெற்று போர்க்கால அடிப்படையில் சாலைகளை தார் சாலைகளாகவும், சிமெண்ட் சாலைகளாகவும் செப்பனிட வேண்டும். விரைவாக மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு மாற்ற ஆவணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

புகார் மனுக்கள்

இதுதவிர பொதுமக்கள் சார்பில் 47 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் கிழக்கு மண்டலத்தில் 10 மனுக்களும், மேற்கு மண்டலத்தில் 8 மனுக்களும், வடக்கு மண்டலத்தில் 10 மனுக்களும், தெற்கு மண்டலத்தில் 44 மனுக்களும் , மத்திய மண்டலத்தில் 10 மனுக்களும், பிரதான அலுவலகத்தில் 5 மனுக்களும் அடங்கும்.

இந்த கோரிக்கை மனுக்களை பெற்று கொண்ட கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மனுக்கள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள், பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.