தூத்துக்குடியை சேர்ந்த சசிகலா புஷ்பா, பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார். இவர் அதிமுக முன்னாள் எம்பி ஆவார். இந்நிலையில், தூத்துக்குடியில் நேற்று முன்தினம் (டிச. 21) பாஜக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய சசிகலா புஷ்பா, தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மனித உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவனை தரக்குறைவாக பேசினார்.
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பிற்பகல் சசிகலா புஷ்பா நாகர்கோவில் சென்றிருந்தார். அப்போது, பி.என்.டி காலனியில் உள்ள சசிகலா புஷ்பாவின் வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பு இருந்த கார் கண்ணாடி, வீட்டு கண்ணாடி, சேர், பூந்தொட்டிகள் ஆகியவற்றை உடைத்து மர்மநபர்கள் சேதப்படுத்தினர்.
மேலும் படிக்க | கால் இருக்காது… நாக்கு இருக்காது – அமைச்சர் கீதாஜீவனுக்கு மிரட்டல் விடுத்த சசிகலா புஷ்பா!
இதை அடுத்து சசிகலா புஷ்பாவின் வீட்டின் முன்பு ஏராளமான பாஜக நிர்வாகிகள் குவிய தொடங்கினர். நகர துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர். தூத்துக்குடி சிப்காட் போலீசார் சசிகலா புஷ்பா வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு தரப்பிலும் வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து, மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் பற்றி அவதூறு பேசிய சசிகலா புஷ்பா மீது வட பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும், சசிகலா புஷ்பா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக தூத்துக்குடி மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர், உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி மாநகராட்சி பெண் கவுன்சிலர் அதிர்ஷ்டமணி, ஆண் கவுன்சிலர்கள் இசக்கி ராஜா, ராமகிருஷ்ணன், பகுதி செயலாளர் ரவீந்திரன் மற்றும் ஒன்பது பெண்கள் உள்ளிட்ட 13 பேர் மீது சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், திமுக மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | எம்ஜிஆர் சிலைக்கு காவி துண்டு – செல்லூர் ராஜு விமர்சனம்