புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 7–ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் கூடுதல் செலவினங்களுக்கு நடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரும் நிதி ஒதுக்கீட்டு மசோதா மீதான விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது பிஹாரை சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்.பி. மனோஜ் ஜா பேசும்போது, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குறுக்கிட்டு, “இவர்கள் வழியில் சென்றால் நாட்டையே பிஹாராக மாற்றி விடுவார்கள்” என்றார்.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவை தொடங்கியதும் பியூஷ் கோயல் தனது கருத்துக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என மனோஜ் ஜா கூறினார். இதையடுத்து அமைச்சர் பியூஷ்கோயல் பேசும்போது, “பிஹாரையோ அல்லது பிஹார் மக்களையோ அவமதிக்கும் எண்ணம் எனக்கு முற்றிலும் இல்லை. எனது கருத்து அவர்கள் மனதை புண்படுத்தியிருந்தால் அதை நான் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன்” என்றார்.