தமிழகத்தில் பணியாற்றி வரும் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்களது அசையா சொத்து விவரங்களை சமர்ப்பிக்குமாறு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் பிறப்பித்த உத்தரவில் “தமிழக அரசின் கீழ் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் அவர்களின் ஆண்டு வருமான விவரத்தினை சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பரம்பரை சொத்துக்கள், சொந்த பெயரில் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கிய சொத்துக்களின் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் சொந்த பெயரில் உள்ள குத்தகை அல்லது அடமானத்தில் வைத்திருக்கும் அசையாச் சொத்து பற்றிய முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். அதேபோன்று குடும்ப உறுப்பினர் அல்லது வேறு நபரின் பெயரில் உள்ள குத்தகை மற்றும் அடமானம் பெற்ற சொத்துக்களின் விவரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விவரங்கள் அனைத்தையும் இணையதளம் வழியாக வரும் 31/12/2022 முதல் 31/01/2023 இடைப்பட்ட காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.