வழக்கமாக கோடிகளில் கல்லா கட்டும் பாலிவுட் சினிமா இந்த முறை அகல பாதாளத்துக்கு சென்றுவிட்டது. பாலிவுட் நட்சத்திரங்களின் பார்வையும் இப்போது தென்னிந்திய இயக்குநர்கள் மீது திரும்பியுள்ளது. இதெல்லாம் ஒருபக்கம் இருக்க இந்த ஆண்டு IMDB ரேட்டிங்கில் அசத்திய டாப் 10 படங்கள் குறித்த லிஸ்ட்டை தற்போது காணலாம்.
தமிழ் படங்கள்
இந்த லிஸ்ட்டில் விக்ரம், பொன்னியின் செல்வன் என இரண்டு தமிழ் படங்கள் இடம்பிடித்துள்ளது. கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் என பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியான விக்ரம் படம் 450 கோடி ரூபாய் வசூலை வாரிக்குவித்தது. இந்தப் படத்துக்கு 8.4 IMDB ரேட்டிங் கிடைத்துள்ளது.
அடுத்ததாக கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப்படமும் வசூலில் 400 கோடியைத் தாண்டியது. தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் வெளிநாட்டு ரசிகர்களையும் இந்தப்படம் கவர்ந்தது. 7.9 IMDB ரேட்டிங் இந்தப்படத்துக்கு கிடைத்துள்ளது.
தெலுங்கு படங்கள்
தெலுங்கில் உருவாகி பான் இந்தியா படமாக வெளியான ஆர் ஆர் ஆர் கிட்டதட்ட 1,200 கோடிகளுக்கு மேல் கலெக்ஷனை அள்ளியது. இந்தப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது நிகழ்ச்சிக்கு சென்றுள்ளது. பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கிய இந்தப்படம் தான் இந்த ஆண்டு வெளியான இந்தியப் படங்களில் அதிக வசூலை ஈட்டிய லிஸ்ட்டில் முதல் இடத்தில் உள்ளது. IMDB ரேட்டிங்கில் இந்தப்படத்துக்கு 8 புள்ளிகள் கிடைத்துள்ளது.
தெலுங்கு இயக்குநர் அனு ராகவுபுடி இயக்கத்தில் உருவான காதல் படமான சீதா ராமம் தான் இந்த ஆண்டின் சிறந்த காதல் படம். இளைஞர்கள் முதல் பெரியவர்களை வரை கொண்டாடப்பட்ட இந்தப்படத்துக்கு IMDB ரேட்டிங்கில் 8.2 புள்ளிகள் கிடைத்துள்ளது. துல்கர் சல்மான், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடித்திருந்த சீதா ராமம் காதலுக்கு மரியாதை செய்திருந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பலதரப்பு மக்களை சீதா ராமம் வசீகரித்தது.
கன்னட படங்கள்
ஏற்கனவே சொன்னது போல கன்னட சினிமாவுக்கு இந்த ஆண்டு ஜாக்பாட் தான். அந்த வரிசையில் சார்லி 777 படம் 8.2 IMDB ரேட்டிங் பெற்றுள்ளது. கேஜிஎஃப் 2 படம் 8.4 IMDB ரேட்டிங்குடன் வசூலிலும் உயர்ந்து நிற்கிறது. இந்தப்படமும் 1200 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. அடுத்ததாக காந்தாரா படம் 8.6 IMDB ரேட்டிங் பெற்று பலரின் கவனம் ஈர்த்துள்ளது. சாதாரண குலதெய்வ கதைக்களத்துடன் களமிறங்கி ஆடியன்ஸ்களை மிரட்டிய இந்தப்படம் 450 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
மும்பை தாக்குதலை மையமாக வைத்து உருவான மேஜர் படம் 8.2 IMDB ரேட்டிங் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், ரேவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மாதவன், சிம்ரன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி படம் 8.8 IMDB ரேட்டிங் பெற்றுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்தப்படம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் படங்கள்
காஷ்மீர் பண்டிட்கள் குறித்து எடுக்கப்பட்ட தி காஷ்மீர் பைல்ஸ் படம் 8.3 IMDB ரேட்டிங் பெற்றுள்ளது. ஜீ ஸ்டுடியோஸ் தயாரித்திருந்த இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக ஹிட் அடித்தது. IMDB ரேட்டிங்கில் மேஜர், தி காஷ்மீர் பைல்ஸ் என இரண்டு படங்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளது.