சென்னை: சென்னைத் தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் வர்த்தக பொருட்காட்சியை வரும் 28-ம் தேதி முதல் தொடங்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னைத் தீவுத்திடலில் 47-வது சுற்றுலா பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டரில் பங்கேற்க அளித்த விண்ணப்பித்தை நிராகரித்ததை எதிர்த்து பெங்களூருவைச் சேர்ந்த பஃன் வேர்ல்ட் என்ற நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு செலுத்த வேண்டிய மூன்று லட்சம் ரூபாய் பாக்கி தொகையை செலுத்தாததால் டென்டரில் கலந்து கொள்ளும் தகுதியை அந்த நிறுவனம் இழந்து விட்டது. எனவே அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதைப் பதிவு செய்து கொண்ட தனி நீதிபதி வழக்கை 50 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து பஃன் வேர்ல்டு நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், “டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கிவிட்டது. டிசம்பர் 28-ம் தேதி முதல் பொருட்காட்சி தொடங்க உள்ளது” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பொருட்காட்சியை திட்டமிட்டபடி தொடங்க அனுமதியளித்து உத்தரவிட்டார். மேலும், மனுதாரர் நிறுவனத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவுக்கு மட்டும் தடை விதித்து, மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.