”தலைவர் பொறுப்பை மாற்றினால் ஏற்றுக்கொள்வேன்; அனைத்தும் மாற்றத்துக்குரியது” – கே.எஸ்.அழகிரி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றத்தை ஏற்றுக் கொள்வேன் என டெல்லியில் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் டெல்லியில் உள்ள அக்கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் , காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.
image
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்… ”இன்று நடைபெற்ற கூட்டத்தில், ஜனவரி முதல் மார்ச் வரை நடைபெற உள்ள’ கையோடு கைக்கோருங்கள்’ நிகழ்வின் மூலம், அனைத்து மாநிலத்திலும் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிராமத்திலும் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயண விவரங்கள், மோடி அரசின் தோல்விகள், பாஜக அரசு ஆட்சிக்கு வந்தபின் இந்தியாவில் ஏற்பட்டிருக்கக் கூடிய பின்னடைவுகள் குறித்த துண்டு பிரசுரங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட உள்ளது.
image
அனைத்து கிராமத்திலும் காங்கிரஸ் கொடியை ஏற்றுவது தான் காங்கிரஸின் பிரதான செயல்திட்டம். ஏற்கனவே ஒரு சட்டமன்ற தொகுதிக்கு, 100 காங்கிரஸ் கொடிகளை ஏற்றும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதனை செயல்படுத்துவது தொடர்பான அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துக்களை இன்றைய கூட்டத்தில் தெரிவித்தனர்.
image
கமலஹாசன், கூட்டணிக்கான அச்சாரத்தின் அடிப்படையில் ராகுல் காந்தியின் நடைபயணத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை. கமல்ஹாசன் மதசார்பற்ற கொள்கை உடையவர், நல்ல சிந்தனையாளர். அவர், ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தில் பங்கேற்பதை தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் வரவேற்கிறது
அனைத்து பொறுப்புகளும் மாற்றத்துக்குரியது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை மாற்றினால் அந்த முடிவை ஏற்றுக்கொள்வோம். அனைவரின் கடமை கட்சி பணி செய்வதே” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.