சென்னை: மதிப்பெண்கள் இன்றி, ‘ஆல் பாஸ்’ தேர்ச்சி பெற்ற 10ம் வகுப்பு மாணவர்கள், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது, தங்களது மதிப்பெண்களை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுதும் ‘கொரோனா’ தொற்று பரவிய போது, 2020 – -21ம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சி.பி.எஸ்.இ., சார்பில், ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகள் அடிப்படையில், தரநிலை சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ‘ஆல் பாஸ்’ என்ற அனைவருக்கும் தேர்ச்சி சான்றிதழ், மதிப்பெண்கள் இன்றி வழங்கப்பட்டது. ‘ஆல் பாஸ்’ பெற்ற, 10ம் வகுப்பு மாணவர்கள், நடப்பு கல்வி ஆண்டில் பிளஸ் 2 படிக்கின்றனர். இவர்கள் பிளஸ் 2க்கு பின், ஐ.ஐ.டி., – என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
ஜன., 24 முதல் 31 வரை, ஜே.இ.இ., தேர்வு நடக்கிறது. இம்மாதம், 15 முதல், ஜன., 12 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் மாணவர்கள், 10ம் வகுப்பு மதிப்பெண் அல்லது தர நிலையை குறிப்பிட வேண்டியது கட்டாயம்.
மாநில பாடத்திட்டத்தில், ‘ஆல் பாஸ்’ பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழில் மதிப்பெண்ணோ, தரநிலையோ வழங்கப்படவில்லை. அதனால், இந்த மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் அனுப்பினர். அதில், 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரப்பட்டது.
இந்நிலையில், ஜே.இ.இ., நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்படுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்