புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோயில் அருகே ரெஸ்டோ பார் ‘பப்’ நடனத்துடன் மது பார் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றி தெரியவந்ததும் அந்த இடத்தில் மது பார் திறக்க அந்தப் பகுதி மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. மேலும், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில், இன்று இரவு மதுபாரை திறப்பதற்கான வேலைகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் வந்ததும் அப்பகுதி பெண்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஒன்று திரண்டு சம்பவ இடத்துக்கு வந்தனர். இதையடுத்து அந்த மது பாரின் கதவை திறந்து உள்ளே புகுந்து செங்கல், துடைப்பம், தடி, உருட்டுக்கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்க தொடங்கினார்கள். அங்கிருந்த ஜன்னல் கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகள், அலங்கார பூந்தொட்டிகள், பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடினர்.
மது பாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். பின்னர் மது பாரை விட்டு வெளியே வந்த பெண்கள் , பொதுமக்கள் திடீரென்று அங்கு நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் உள்ளிட்டோரும் அங்கு வந்து மது பாருக்கு எதிராக போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த முத்தியால்பேட்டை போலீஸார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய மதுக்கடை திறப்பது குறித்து அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத்தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனிடையே, மதுக்கடையை சூறையாடியது, ஊழியர்களிடம் தகராறு செய்தது மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக நடந்து கொண்டது தொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டன் உள்பட 18-க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மதுக்கடை சூறையாடப்பட்டது தொடர்பாக ஜீவாநந்தம் (60), விநாயகம்(எ)சங்கர் (45), சரவணன்(39), மகி (26), வினோத் (எ) வினோத்குமார் (34), சக்திவேல் (எ) ஹரீஷ் (24), பிரசாந்த் (28) ஆகிய 7 பேரை இன்று கைது செய்தனர். தொடர்ந்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.