மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் வாசை என்ற தொலைக்காட்சி தொடரின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த தொலைக்காட்சி தொடருக்கான படப்பிடிப்பு நடந்துவந்த செட்டில், அதில் பணியாற்றிய நடிகை துனிஷா சர்மா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தொடர்ந்து, அவருடன் அதே தொடரில் இணைந்து நடித்து வரும் நடிகர் ஷீசன் முகமது கான் என்பவர்தான் நடிகையை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
20 வயது ஆன துணிஷா சர்மா நேற்று படப்பிடிப்பில் இருந்தபோது, பாத்ரூம் சென்று வருவதாக கூறி சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் அவர் வரவில்லை. தொடர்ந்து, சிலர் அங்கு சென்று பார்த்தபோது, கதவு தாழ்பாள் போடப்பட்டிருந்தது.
பின்னர் அங்கிருந்தவர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே பார்த்தபோது, நடிகை துணிஷா தூக்கிட்ட நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசென்ற நிலையில், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தற்கொலை எண்ணங்கள் எழுந்தால், சினேகா அமைப்பின் 044 -24640060 ஹெல்ப்லைன் எண்ணிற்கு தொடர்புக் கொள்ளலாம். மேலும், தமிழக அரசின் ஹெல்ப்லைன் நம்பர் 104 க்கும் தொடர்புகொண்டு நீங்கள் பேசலாம்.
தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். துனிஷா படப்பிடிப்பு தளத்தில் தற்கொலை செய்துகொண்டதாக அங்கிருந்தவர்கள் கூறினாலும், போலீசார் அனைத்து வகையிலும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர். உயிரிழந்த துனிஷாவின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், சக நடிகர் முகமது கான் மீது போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டுள்ளனர்.
துனிஷா சர்மா குழந்தை நட்சத்திரமாக பல தொடர்களில் நடித்து வந்துள்ளது. சோனி டிவியில் ஒளிபரப்பான “மகாராணா பிரதாப்” என்ற தொடரில் சந்த் கன்வார் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் துனிஷா நடித்துள்ளார். குறிப்பாக, பாலிவுட் நடிகை கத்திரினா கைஃப்பின் படங்களில், அவரது சிறுவயது கதாபாத்திரங்களில் துனிஷா நடித்துள்ளார்.
அவர் தற்கொலை செய்துகொள்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் கூட இன்ஸ்டாகிராமை பயன்படுத்தியுள்ளார். அதில், கடைசியாக நேற்று அவர் போட்டுள்ள பதிவில்,”தாங்கள் சாதித்தே ஆக வேண்டும் என்ற வேட்கையால் உந்தப்படுபவர்கள், ஒருபோதும் நின்றுவிடுவதில்லை” என குறிப்பிட்டுள்ளார். மேலும், மேக்கப் செய்துகொண்டு படப்பிடிப்புக்கு தயாராகி வருவதையும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக பதிவிட்டுள்ளார்.