பாட்னா, பீஹாரில் கள்ளச்சாராயம் குடித்து 71 பேர் பலியான விவகாரத்தில், முக்கிய குற்றவாளியான மருத்துவ உதவியாளர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இங்கு, சமீபத்தில் சரண் மற்றும் சீவான் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 71 பேர் பலியாகினர். ஆனால், 38 பேர் பலியானதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கள்ளச் சாராயம் விற்பனை தொடர்பாக, ஏற்கனவே ஒன்பது பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான ஹோமியோபதி மருத்துவ உதவியாளர் உட்பட ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து சரண் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் குமார் கூறுகையில், ”கள்ளச்சாராயம் காய்ச்சியதில், ஹோமியோபதி மருத்துவ உதவியாளர் முக்கிய குற்றவாளியாக செயல்பட்டுள்ளார்.
”இதையடுத்து, அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்துள்ளோம். இவர், ஹோமியோபதி மருந்துடன், ரசாயனங்களை கலந்து கள்ளச் சாராயம் தயாரித்துள்ளார்,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement