காபூல்: ஆப்கனில் தொண்டு நிறுவனங்களில் பணியாற்ற பெண்களுக்கு தலிபன்கள் தடை விதித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மறு அறிவிப்பு வரும் வரை ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பை கேட்டு, ஆப்கன் பெண்கள் பலர் பல்கலைக்கழக வகுப்பு அறையிலேயே கண்ணீர் விட்டு அழுதனர். மேலும் இன்று பல்கலைக்கழங்களுக்கு வந்த மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
தலிபான்களின் இந்த முடிவை எதிர்த்து நாடு முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மீண்டும் ஒரு சர்ச்சையான உத்தரவை தலிபான்கள் அறிவித்துள்ளனர். அதாவது, ஆப்கனில் உள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டு நிறுவனங்களில் பெண்கள் ஊழியர்களாக இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஆப்கனின் பொருளாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தலிபான்களின் இந்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபை விமர்சித்துள்ளது.
ஆப்கனிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்று உறுதியளித்தனர். எனினும், தலிபான்களின் ஆட்சி அவ்வாறு இல்லாததால் சர்வதேச அளவில் அவர்கள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.