திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே கிளிக்கூடு பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் பிரகாசும், அதே பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் அசோக்கும் உறவினர்கள். இவர்களுக்கிடையே கடந்த 2019-ஆம் ஆண்டு குலதெய்வம் கோவிலில் வழிபாடு நடத்துவதில் தகராறு ஏற்பட்டது.
இந்த முன் விரோதத்தின் காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு அசோக்கின் சித்தப்பா மகன் அறிவழகன் என்பவரை பிரகாஷ், மதியழகன் மற்றும் ஆனந்த் உள்ளிட்ட மூன்று பேரும் சேர்ந்து வெட்டி கொலை செய்துள்ளனர்.
அதனால் அசோக், பிரகாஷ் மீது தீராத ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் பிரகாஷ் தனியாக நம்பர் ஒன் டோல்கேட் கடைவீதி பகுதியில் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அசோக் மற்றும் இரண்டு பேர் இருசக்கரவாகனத்தில் அங்கு வந்து, பிரகாசை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டதனால், சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரகாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர், போலீசார் தப்பி ஓடிய மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். முன் விரோதத்தினால் பழிக்கு பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.