ரேவா: மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டம் மவுகஞ்ச் பகுதியை சேர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வீடியோவில், மவுகஞ்ச் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது 19 வயது காதலியை கண்மூடித்தனமாக தாக்கி கீழே தள்ளி காலால் உதைக்கும் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பலமாக தாக்கப்பட்ட அந்த பெண் மயக்கமடைந்தார். இதையடுத்து அந்த நபர் அந்த பெண்ணை அப்படியே சாலையில் விட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டார்.
நீண்ட நேரமாக அந்த பெண் அங்கு மயங்கி கிடந்தது அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த இடத்துக்கு வந்த கிராம மக்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். கொடூரமாக தாக்கிய அந்த நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 151-ன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.