ஐதராபாத்: ஐதரபாத்தில் உள்ள தனது வீட்டில் பழம்பெரும் தெலுங்கு நடிகர் சலபதி ராவ், திடீர் மாரடைப்பால் இன்று காலை காலமானார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த பழம்பெரும் நடிகர் சலபதி ராவ் (78) கடந்த சில மாதங்களாக உடல்நிலை சரியில்லாமல் தொடர் சிகிச்சை இருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு ரவி பாபு என்ற மகனும், மாலினி தேவி, தேவி என்ற மகள்களும் உள்ளனர். சலபதி ராவ்வின் திடீர் மறைவுக்கு தெலுங்கு திரைத்துறையினர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். கடந்த 1944ல் ஒருங்கிணைந்த ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் பிறந்த சலபதி ராவ், 1966ம் ஆண்டு ‘குத்தாச்சாரி 116’ என்ற திரைப் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
சுமார் 1200க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராகவும், வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்த சலபதி ராவ், என்.டி.ஆர் முதல் ஜூனியர் என்.டி.ஆர் வரை, மூன்று தலைமுறை ஹீரோக்களுடன் நடித்துள்ளார். மேலும் கலியுக கிருஷ்ணடு, கடப்பா ரெட்டிமா போன்ற படங்களை தயாரித்தும், சில படங்களை இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு திரையுலகின் முதல் தலைமுறை நடிகரான கைகல சத்யநாராயணா கடந்த சில நாட்களுக்கு முன் இறந்த நிலையில், தற்போது சலபதி ராவின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.