சென்னை குரோம்பேட்டையில் உள்ள சத்தியவாணி முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் – பரோலினா தம்பதியினர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. ஜெகநாதன், குரோம்பேட்டை பகுதியில் இளநீர் கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நேற்று அவர், தன்னுடைய மனைவி பரோலினை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு குரோம்பேட்டை பகுதியில் இருந்து ஒரகடம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
இதையடுத்து இவர்கள் படப்பை அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த லாரி இவர்களுடைய இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். அதில் சாலையில் விழுந்த பரோலினா மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் கணவர் கண் முன்னாடியே தலை நசுங்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார், காயம் அடைந்த ஜெகநாதனை சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், சம்பவ இடத்தில் பலியான பரோலினா உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற லாரி ஓட்டுனரையும் தேடி வருகின்றனர்.