பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, 2022-ம் ஆண்டு இந்தியாவிற்கு பல்வேறு விதங்களில் சிறப்பாக அமைந்ததாக நினைவுகூர்ந்தார்.
இந்த ஆண்டு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறிய இந்திய பிரதமர் , ஜி-20 நிகழ்ச்சியை மிகப்பெரிய இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகாசனம் பயனுள்ளதாக இருப்பது மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மையத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக இந்திய பிரதமர் கூறினார்.
இந்த ஆய்வின்படி, தொடர்ந்து யோகாசனம் செய்பவர்களுக்கு மீண்டும் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 15 சதவீதம் குறைவதாகவும் தெரிவித்தார். உலக நாடுகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு முறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.